பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரியான இனிப்பான பட்ஜெட்: அமைச்சர் ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 05:39 pm
minister-jayakumar-replied-to-stalin-about-tn-budget-2019

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரியான இனிப்பான பட்ஜெட் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது. 

தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பட்ஜெட் உரை முடிந்து வெளியே வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட், சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப ஓ.பி.எஸ் சொன்னார். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட்' என்றும் கடும் விமர்சனம் செய்தார்.

இவரது கருத்துக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், 'சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "தமிழக மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல. அனைவர்க்கும் பயன்படும் நாட்டுச் சுரைக்காய். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரியான இனிப்பான பட்ஜெட். வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனவே இருக்கின்ற நிதி நிலைமையைக் கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது.

இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது. சென்னையின் வளர்ச்சிக்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு முன்பு இருந்தவர்கள் பண்புள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.

கஜா புயல் நிவாரணப்பணியாக 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close