ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் ஹம்சவாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதிகளில் உலா வந்தார். இதனை காண வந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
108வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான அரங்கன் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் திருப்பள்ளியோடத் திருநாள் எனப்படும் மாசித்தெப்பத்திருவிழாவானது கடந்த 6ம் தேதியன்று தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.
9 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல்நாளில் நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.
தொடர்ந்து மாலையில் வாகனமண்டபத்திற்கு புறப்பாடாகி வந்த நம்பெருமாள், அங்கு ஹம்சவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்த அவர், உள்திருவீதிகளின் வழியாக வலம்வந்து மீண்டும் வாகன மண்டபத்தை வந்தடைந்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் நம்பெருமாளை சேவித்துச் சென்றனர். பின்னர் இரவு வாகனமண்டபத்திலிருந்து புறப்பாடாகி 9.15மணிக்கு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். முக்கிய திருநாளாக 8ம்நாள் வருகிற 15ம்தேதியன்று தெப்பஉற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
newstm.in