தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 11:06 am
tn-budget-2019-session-starts-today

தமிழக பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டம் ஜனவரி 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. பின்னர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஜனவரி 3ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உரையுடன் கூட்டம் முடிந்தது. 

அதன் தொடர்ச்சியாக 2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக  பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை சுமார் இரண்டரை மணி நேரமாக வாசித்தார். தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் பேரவையை ஒத்திவைத்தார்.

தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதாவது பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், 14ம் தேதி பட்ஜெட் உரை மீது ஓபிஎஸ் பதில் அளிப்பார் என்றும் அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியுள்ளது. கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பர். அடுத்ததாக பூஜ்ய நேரத்தில் (zero hour) எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவர். 

தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவர். அதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். இறுதியாக 14ம் தேதி விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துப் பேசுவார். அத்துடன் கூட்டத்தொடர் முடிவடையும்.

newstm.in 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close