நாளை மறுநாள் தேமுதிக-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து! - அதிமுக தகவல்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:44 am
admk-dmdk-alliance-will-be-signed-on-march-10

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுடனான கூட்டணி ஒப்பந்தம் நாளை மறுநாள் (மார்ச் 10) கையெழுத்தாகும் என அதிமுக தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், அதிமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், நான்கு தினங்களுக்கு முன்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக - தேமுதிக கூட்டணி நாளை (மார்ச்.5) இறுதி செய்யப்படும் என்றும், மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கண்டிப்பாக இடம் பெறுவார்" என்றும் தெரிவித்தார். 

பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே தேமுதிக நிர்வாகிகள், திமுகவின் பொருளாளர் துரைமுருகனை சந்தித்து திமுக அணியில் இணைய விருப்பம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் விஜயகாந்தின் மைத்துனரான எல்.கே.சுதீஷ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலைச் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதையடுத்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க இயலாது என திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சுதிஷ் நேற்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக,  அதிமுக- தேமுதிக உடனான கூட்டணி குறித்த ஒப்பந்தம் நாளை மறுநாள்(மார்ச் 10) கையெழுத்தாகும் என அதிமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close