திருவண்ணாமலையிலும் தேர்தல் தேதியை ஒத்திவைக்க கோரி கலெக்டரிடம் மனு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 04:00 pm
election-should-be-postponed-in-thiruvannamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கிரிவலம் நடைபெற இருப்பதையொட்டி, ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அன்றைய தினம் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் நேரம். எனவே தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மதுரை மாவட்ட மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து தற்போது திருவண்ணாமலையிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் என்பவர் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்துள்ளார். 

அவர் அளித்த மனுவில், "தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் இந்தாண்டு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதே நாளில் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும். 

இதனால் திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடைபெறும் நாளை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். எனவே இந்து மக்களின் தர்மத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close