28 ஆண்டுகளுக்கு பின் தென்காசி(தனி) தொகுதியில் திமுக! வெற்றிக்கனியை பறிக்குமா?

  முத்துமாரி   | Last Modified : 17 Mar, 2019 05:47 pm
dmk-is-going-to-contest-in-tenkasi-constituency-after-28-years

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்தொகுதியான தென்காசியிலிருந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது. தென்காசி தொகுதியில் திமுக இதுவரை ஒருமுறை போட்டியிட்டு தோல்வியை தழுவியது.. இதுபற்றி சற்று விரிவாக... 

தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளில் முக்கியமான ஒரு தனித்தொகுதி தான் தென்காசி. இத்தொகுதியில் கடந்த 1957ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்று எம்.பிக்களாக இருந்துள்ளனர். 

1991ம் ஆண்டு திமுக முதன்முறையாக இத்தொகுதியிலிருந்து நேரடியாக போட்டியிட்டுள்ளது. வேட்பாளராக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். ஆனால், இவர் காங்கிரஸ் வேட்பாளர் அருணாச்சலத்திடம் தோல்வியடைந்தார். அருணாச்சலம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1977-96 கால கட்டத்தில் தொடர்ந்து 6 முறை அத்தொகுதியின் எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 

1991ம் ஆண்டுக்கு பிறகு திமுக, தனது கூட்டணி கட்சிகளையே தென்காசி தொகுதியில் நிறுத்தி வருகிறது. இதில், 2004மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் வசந்தியும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் வசந்தி, கிருஷ்ணசாமியை 1 லட்சத்து 61,774 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் 2,62,812 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக எம்.பி வசந்திக்கு அடுத்தபடியாக வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்த புதிய தமிழகம் கட்சி இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். 

இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக தென்காசி தொகுதியில் களமிறங்க உள்ளது. இதுவரை திமுக நேரடியாக போட்டியிட்டு தென்காசி தொகுதியில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.

முதல்முறை தோல்விக்கு பிறகு கூட்டணி கட்சிகளையே களத்தில் இறக்கி வந்தது. தற்போது நேரடியாக களம் காண்பதால், அப்பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ள ஒருவரை தான் நிறுத்த வேண்டும் என்று திமுக, வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்பட்டுள்ளது. 

இதனால் வரும் தேர்தலில் தென்காசியில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையாவது நேரடியாக போட்டியிடும் திமுக வெற்றிக்கனியை பறிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close