8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை; அரசாணையும் ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 11:20 am
8-way-road-judgement-on-april-8-by-madras-high-court

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்றும் இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் கையப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

பூவுலகின் நண்பர்கள், திமுக சார்பில் வழக்கறிஞர்கள்,  நில உரிமையாளர்கள், விவசாயிகள் ஆகியோர் இத்திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர். 

தொடர்ந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக, விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வருகிற ஏப்ரல் 8ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, தமிழக அரசு மக்களிடம், நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:

►  சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, தமிழக அரசு மக்களிடம், நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது. 

►  இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் உடனே நிறுத்த வேண்டும்.

►  8 வழிச்சாலை திட்டம்  அவசரகதியில் செயல்படுத்தப்படுகிறது. கள ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை.

►  எனவே இத்திட்டத்தில் மக்களிடம் நேரடியாக கள ஆய்வு நடத்த வேண்டும். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை பெற வேண்டும். அதன்பிறகே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். 

►  அடுத்த 8 வாரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முறையாக அதன் உரிமையாளர்களிடம் அளிக்க வேண்டும். அவர்களின் பெயர்களிலே, நிலத்தை பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும்.  

►  சுற்றுசூழல் அறிக்கை பெற்ற பிறகே, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர பணிகளை தொடர முடியும். இவையெல்லாம் முடிந்தபிறகு, திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்து புதிய அரசாணையையும் வெளியிடவேண்டும்

►  ஏற்கனவே இத்திட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ள்ளனர். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close