காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்: பியூஷ் கோயல்

  அனிதா   | Last Modified : 12 Apr, 2019 05:12 pm
people-will-never-believe-congress-promises-piyush-goyal

காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், " வரும் 18 ஆம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த முறை தமிழகத்தில் அமைத்துள்ள மெகா கூட்டணி மாபெரும் வெற்றியை எங்களுக்கு பெற்றுத் தரும். இந்த கூட்டணி வெற்றி பெற்ற பின், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்வோம்.

சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் துவங்கப்பட்ட தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்களின் குடிநீர் பிரச்சனைகளை போக்குவதோடு, விவசாயிகளின் இன்னல்களையும் போக்குவோம்.

மேலும், நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தேவையான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நதிநீர் இணைப்பு குறித்து பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் அறிவித்தவுடன் அதற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நலத்திட்டங்கள் மூலம் விவசாயிகளின் பிரச்னைகள் பெருமளவு குறையும். விவசாயிகளின் வருமானத்தை 2022 க்குள் இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் எடுக்கப்படும். தீவிரவாதத்தை ஒழிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியை போல ஒருவர் நாட்டிற்குத் தேவை.

காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற எங்கள் அரசின் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்தித்த போது விவசாயிகளுக்கும் பென்ஷன் முறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளை கலந்தாலோசித்து நல்ல முடிவை பா.ஜ.க அரசு மேற்கொள்ளும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளித்த ஆதரவைப் போல் மீண்டும் பா.ஜ.க ஆட்சி மலர ஆதரவு தமிழக மக்கள் அளிக்க வேண்டும். நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற கோட்பாட்டுடன் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டுமே ஊழல் கட்சிகள்தான், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது, வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுவதில் எவ்வித உள்நோக்கங்களும் கிடையாது.

மருத்துவ கல்லூரிகளில் வரும் வருமானத்தை பணக்கார மாணவர்களுக்கு இடம் வழங்குவதன் மூலம் பெருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ், திமுக கட்சிகளின் நோக்கம் அதன் காரணமாகவே நீட் நுழைவுத் தேர்வை முடிவுக்கு கொண்டுவர நினைக்கின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை அகற்றுவது குறித்து கூறியிருந்தாலும் அவர்களிடம் பேசி சமரசம் செய்வோம். அதற்கு பதிலாக நீட் தேர்வை தமிழில் நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என செய்தியாளர்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close