சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 05:52 pm
if-you-jumped-signal-you-will-get-e-challan

உலகிலேயே அதிக சாலை போக்குவரத்தைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக எடுத்துரைத்து வருகிறது. சாலை விதிகளை மீறினால் அதற்கேற்ப அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தான், சமீபத்தில் இந்தியாவில், 'ஆன்லைன் பணப்பரிவர்த்தனை' (Cashless Transaction) முறை கொண்டுவரப்பட்டது. அதாவது, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதத் தொகையை பணமாக வசூலிக்காமல், முறையான ரசீது கொடுத்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வசூலிக்கும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. போலீசார் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்கவும் இந்த முறை கொண்டுவரப்பட்டு, தற்போது இந்தியாவில் பெரும்பாலாக அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட்டும் வருகிறது. 

தற்போதைய சூழலில், சாலை விதிகளை மீறுபவர்களை போலீசார் நேரடியாக மடக்கி பிடித்து, அவரிடம் அபராதத்தொகை வசூலித்து எச்சரித்து அனுப்புகின்றனர். சிலர், போலீசாருக்கு 'டாட்டா' காட்டிவிட்டு எஸ்கேப் ஆகி விடுவதும் வழக்கமான ஒன்று தான். அவர்களை பிடிக்க போக்குவரத்து காவலர்களும் மெனக்கெடுவார்கள். இனிமேல் அதற்கெல்லாம் அவசியமில்லாமல் 'contactless enforcement system' என்ற புதிய முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 

இதன்படி, அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் அனைத்து சிக்னல்களிலும் பொருத்தப்படும். விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டியின் வண்டி எண், போக்குவரத்துத்துறையில் உள்ள விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு, அபராத ரசீது( e-challan Receipt) தயாரிக்கப்பட்டு, நேரடியாக அவர்களது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

அந்த வாகன ஓட்டி, சாலை விதிகளை மீறிய புகைப்படமும் ரசீதுடன் இணைத்து அனுப்பப்படும். இதன்மூலம் போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அவர்களுக்கு வேலை எளிதாகும். 

ரசீது பெறப்பட்ட பின்னர், அந்த நபர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ அபராதத் தொகையை செலுத்த வேண்டும். 

வாகனத்தில் அதிக வேகத்தில் செல்லுதல், சிவப்பு விளக்கு எரியும் போது சாலையை கடத்தல், தவறான வழியில்(one-way) பயணித்தல், தடை செய்யப்பட்ட வழிகளில் செல்லுதல் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். 

சென்னையில் அண்ணா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில், இந்த நவீன முறை சோதனையில் இருந்து வருகிறது. அண்ணா நகர், சாந்தி காலனி, 100 அடி சாலை, திருமங்கலம் சந்திப்பு ஆகிய இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சோதனை முடிவடைந்த பின்னர், முதற்கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த வசதி விஸ்தரிக்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் இது தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில், வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அதேபோன்று ஹைதராபாத்தில் 10 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close