பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' (TANCET ) நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
பி.இ. படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET , AUCET என்ற இரண்டு வகையான நுழைவுத்தேர்வுகளை எழுதவேண்டியிருந்தது. அதாவது, அண்ணா பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு AUCET (Anna University Common Entrance Test) தேர்வையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் சேர 'டான்செட்' (TANCET ) தேர்வையும் எழுத வேண்டும். இந்த இரண்டு தேர்வுகள் இருப்பதால் மாணவர்களிடையே ஒரு குழப்பமும் நீடித்து வந்தது. இரண்டு தேர்வையும் எழுத வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து, முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால், ஒரே ஒரு பொது தேர்வு எழுதினால் போதுமானது என்று உயர்கல்வித்துறை நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக இன்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம பேசுகையில், "தற்போது முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர, 'டான்செட்' (TANCET ) ஒரே ஒரு நுழைவுத்தேர்வை எழுதினால் போதுமானது. மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. டான்செட் தேர்வை கடந்த முறை போலவே இந்த முறையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
newstm.in