ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிப்பதாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலினால் அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. காற்றுடன் பலத்த கனமழையும் பெய்ததையடுத்து, பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளிப்பதாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒடிசா மாநிலத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். புயலின் பாதிப்பில் இருந்து ஒடிசா மக்கள் மீண்டு வர தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in