காவல்துறையின் சாதனை! காவல் ஆணையருக்கு நன்றி

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 03:34 pm
cctv-cameras-are-playing-major-role-to-find-convicts-ak-viswanathan

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட "மூன்றாவது கண்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடினை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல செஸ் விளையாட்டு வீரரான 'கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன், "மக்களை பாதுகாத்திடும் நோக்கில் சென்னை நகரினை, குற்றமில்லாத சமூகமாக உருவாக்கிடும் காவல்துறையின் முயற்சியில் சி.சி.டி.வி கேமராக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. ஒவ்வொரு 50மீட்டர் இடைவேளையிலும் நகர் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் தற்போது மக்களின் மனதில் பயமின்மையையும், குற்றவாளிகள் மனதில் பயத்தையும் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் காவல்துறையின் பணிச்சுமை குறைந்துள்ளது. உண்மை குற்றவாளிகளை விரைவாக கண்டறிய காவல்துறையின் ஒரு அங்கமாக சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது திகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி குற்ற நிகழ்வுகளை 100% குறைக்க பாடுபட வேண்டும். அதன் மூலம் ஒரு அமைதியான சமூகத்தினை உருவாக்க காவல்துறையினருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்" என்று பேசினார்.

காவல் ஆணையர் விஸ்வநாதன் - ஓர் குறிப்பு

சென்னை பெருநகரின் காவல் ஆணையராக அ.கா விஸ்வநாதன், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். அவர் இந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் ஒரு சாதனை படைத்துள்ளார் என்றே கூறலாம். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்  சி.சி.டி.வி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம், காவல்துறை சார்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அனைத்துப் பகுதிகளிலும் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. இருந்த போதிலும் மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு பெரிய அளவில் சென்று சேரவில்லை. 

ஆனால், கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. பெரு நகரங்களில் பெரும்பாலாக, அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதில், காவல் ஆணையர் விஸ்வநாதனின் பங்கு அதிகம் என்றே பேசப்படுகிறது. சினிமா பிரபலங்களை அழைத்து வந்து அவர்களை சி.சி.டி.வி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து பேசவைத்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சமீபத்தில் நடிகர்கள் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி, "மூன்றாவது கண்" என சி.சி.டி.வி கேமரா குறித்து பேசியது நினைவிருக்கலாம். அத்துடன் பொது இடங்களில் இது தொடர்பான குறும்படங்களின் மூலமாகவும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

சமீபத்திய குற்ற நிகழ்வுகள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்து வருவது சி.சி.டி.வி கேமராக்கள் தான் என்பதை நாம் செய்திகள் வாயிலாக அறியலாம். இது தொடர்பான விழிப்புணர்வு சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இதையடுத்து மக்கள் தங்கள் வீட்டின்  முன்பாகவும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த முன்வந்தனர். 

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த உலகில், குற்றங்கள் எந்தளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அதேபோன்று அந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என தமிழக காவல்துறை, குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை மக்களிடையே உணர வைத்தது. 

இது தவிர தமிழக அரசின் நிதி உதவி மட்டுமின்றி, பிரபலங்களிடம் நிதி திரட்டி சென்னை உள்ளிட்ட நகர வீதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இப்போது சாதாரண நடுத்தர மக்கள் வசிக்கும் தெருக்களில் கூட நாம் சி.சி.டி.வி கேமராவை காண முடியும். 

குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்களிடையே இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறைக்கும், காவல் ஆணையர் அ.கா. விஸ்வநாதன் அவர்களுக்கும் மக்களின் சார்பாக Newstm நன்றி தெரிவித்துக்கொள்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close