அதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத்தலைமை தேவை: ராஜன் செல்லப்பா

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 02:33 pm
aiadmk-needs-strong-single-leadership-rajan-chellappa

அதிமுகவுக்கு வலிமையான ஒற்றைத்தலைமை தேவை என  மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. எனவே ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும்.

அதிமுகவில் யாரிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அது யார் என்பதை விரைவில் அதிமுக செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. அப்படியல்லாமல் இவர்களைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம்.

நான் சொல்லும் கருத்துக்கள், கட்சியின் பிரச்சினை கிடையாது. சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். அதிமுகவிலுள்ள, சின்ன, சின்ன நெருடல்களால் திமுக பலன் பெற முடியாது. எந்த ஒரு அதிமுக தொண்டரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.

தினகரன் என்கிற மாயை தமிழகத்தில் முடிந்து விட்டது. தேனி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆனால், இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் இதுவரை ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. அவர்களை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆட்சியை காப்பாற்றக் கூடிய வகையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும் கூட, ஜெயலலிதாவுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக செலுத்தச் செல்லாதது, ஏன் என்ற கேள்வி எழுகிறது. ரவீந்திரநாத் உடனேயே 9 எம்எல்ஏக்களும், ஜெயலலிதா நினைவிடம், சென்றிருக்க வேண்டும்" என ராஜன் செல்லப்பா தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close