காவல்துறையில் புகார் அளிக்க DIGICOP 2.0 செயலி அறிமுகம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 03:05 pm
digicop-2-0-application-introduced-by-chennai-commissioner

காவல்துறையினரின் பணியினை துரிதமாக்கும் பொருட்டு  DIGICOP 2.0 செயலியை பொதுமக்கள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் பதிவிறக்கம் செய்து புகார்களை விரைந்து அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட DIGICOP 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட அலைபேசி செயலியை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் சீமா அகர்வால் ஆகியோர் துவக்கி வைத்தனர். DIGICOP செயலியானது கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியில் காணாமல் போகும் அல்லது திருடப்படும் அலைபேசிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று அறிமுகம் செய்யப்பட்ட DIGICOP 2.0 என்ற செயலியானது CCTNS என்னும் நவீன தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவான அனைத்து புகார்களையும் பொதுமக்கள் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி மூலம் புகாரின் தன்மை, வழக்குப்பதிவு குறித்த விவரங்கள், முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள், குற்ற நிகழ்விடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையம் உள்ளிட்ட விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள இயலும் எனவும், இந்த செயலியின் மூலம் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை பதியும்பொழுது, அந்த வாகனத்தின் முழு குற்ற பின்னணியும் தெரிந்துகொள்ள இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட DIGICOP செயலியை இதுவரை 72 ஆயிரத்து 155 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், அதில் 33 ஆயிரத்து 839 பேர் சுய விவரங்கள் அளித்து செயலியில் தங்களது கணக்கை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த செயலி மூலம் 26 ஆயிரத்து 874 திருடப்பட்ட, தொலைக்கப்பட்ட மற்றும் பறிக்கப்பட்ட அலைபேசியின் விவரங்கள் பதியப்பட்டுள்ளதாக கூறிய அவர், 8 ஆயிரத்து 311 திருடப்பட்ட அலைபேசி குறித்த புகார்கள் DIGICOP செயலி மூலம் பதிவாகியுள்ளதாகவும் அதில் 4 ஆயிரத்து 86 காணாமல் போன அலைபேசிகள் விவரம் IMEI எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட  ஆயிரத்து 227 அலைபேசிகளின் விவரங்களும், 151 மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விவரங்களும் DIGICOP செயலியில் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், DIGICOP செயலி மூலம் தங்கள் பகுதி காவல் நிலையங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பயன்பெறுவது அதிகரித்துள்ளதாகவும்,  தற்போது அறிமுகபடுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட செயலி மேலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து புகார்களையும் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 72 ஆயிரம் பேரை தாண்டி அனைவரும் காலம் தாழ்த்தாமல் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிப்பதன் மூலம் காவல்துறையினர் தங்கள் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close