மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பிக்கள் இன்று மக்களவையில் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில், வேலூர் தவிர 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 38 தொகுதிகளில், திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களும், தேனி மக்களவைத்த் தொகுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமாரும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், புதிய எம்.பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று மக்களவையில் சபாநாயகர் முன்பு தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றார்.
அதைத்தொடர்ந்து தமிழக எம்.பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். தமிழக எம்.பிக்கள் அனைவருமே, தமிழில் உறுதிமொழி எடுத்து, சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று முடித்ததும், 'தமிழ் வாழ்க' என்று கூறினர். இதனால், அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
newstm.in