நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த 'கக்கன்' அவர்களின் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

  முத்துமாரி   | Last Modified : 18 Jun, 2019 05:13 pm
freedom-fighter-kakkan-s-112th-birthday

மதுரை மாவட்டம் மேலூரில் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர் கக்கன். இவரது தந்தையார் அங்குள்ள சேரிப்பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக சேவை புரிந்து வந்துள்ளார். தந்தையுடன் தானும் கோவிலுக்குச் செல்வதால் சிறு வயது முதலே கக்கன் கடவுள் பற்றுடன் இருந்தார். இவரது தமையனார் பெயர் விஸ்வநாதன் பின்னாளில் வழக்கறிஞராக திகழ்ந்தார். 

கக்கனின் அரசியல் குருவாக அறியப்படுபவர் வைத்தியநாதய்யர். இவரது தூண்டுதலின் மூலமாகத்தான், கக்கன் ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தவர் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. இதனை எதிர்த்து ராஜாஜி 1939ல் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அனைத்து சமூகத்தினரும் கோவிலுக்குள் செல்லலாம் என்று. இருந்தபோதிலும் ஒரு சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. 

அந்த சமயத்தில் மதுரை கோவிலினுள் நுழைய மேல் சமூகத்தினர் எதிர்த்தபோது, வைத்தியநாதய்யர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டு மதுரை கோவிலுக்குள் நுழைந்தார். அதன்பின்னர் அரசியலில் முழு ஈடுபாடு கொண்டார். 

மேட்டூர் அணை, வைகை அணையை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியவர் கக்கன். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டுவந்ததும் அவர் தான். தாழ்த்தப்பட்டோருக்கான வீட்டு வசதி வாரியம் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியவர். 

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக தனது பணியை சிறப்பாக மேற்கொண்டார். இவர் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது தான் தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

தான் மத்திய அமைச்சராக இருந்த போதும், தனது மகளை கான்வென்ட் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். அவருடைய மனைவி ஆசிரியையாக அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர் நினைத்திருந்தால் தனது மனைவிக்கு அரசுப்பள்ளியிலே அதிக சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதே பள்ளியில் தான் அவர் தனது சேவையை தொடர்ந்தார். அவரது மனைவியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. 

அதே போன்று தனது சகோதரர் விஸ்வநாதன் வேலை இல்லாமல் இருந்தும், அவருக்காக அரசுப்பணிக்கு சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார். தாழ்த்தப்பட்டோருக்கான நல இயக்குனர் லயோலா கல்லூரியின் அருகே விஸ்வநாதனுக்கு ஒரு கிரவுண்ட் இடத்தை ஒதுக்கி கொடுத்தார். 

இதை அறிந்த கக்கன், தனது தமையனிடம் சென்று, "தாழ்த்தப்பட்ட மக்கள் பலர், இருப்பதற்கு கூட இடம் இல்லாமல் இருக்கின்றனர்.. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு இடம் உனக்கு தேவையா..?" என்று கூறி அந்த இட ஒதுக்கீட்டு ஆவணத்தை கிழித்து எறிந்து விட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடிவெள்ளியாக அவர் இருந்துள்ளார் என்றால் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கக்கன் அவர்களுக்கு அதிக சமயப்பற்று இருந்ததால், ஈ.வே.ராமசாமி நாயக்கர் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபோது, கக்கன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஸ்ரீ ராமனின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த குற்றத்திற்காக ஈ.வே.ராமசாமி நாயக்கர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தார் கக்கன்.

மேலும், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் போட்டியிட்ட போது, தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது தேர்தல் செலவின கணக்கில், நூறு ரூபாய் குறைந்தது. தனது மனைவியின் நகைகளை விற்று, அந்த நூறு ரூபாயை அவர் ஈடு கட்டினார்.

அப்போது தேர்தல் கணக்கு வழக்குகளை காமராஜரிடம் ஒப்படைத்த போது,  'இதையெல்லாம் நான் உன்னிடம் கேட்கவில்லையே.." என்று கூறினார். அப்போதும் கூட தனது மனைவியின் வளையலை விற்று கணக்கை சமன் செய்தது குறித்து அவர் காமராஜரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.. அவரது நேர்மைக்கு இந்த நிகழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன், 1962ம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் குழுவின் தலைவராக இருந்த அவர், அந்த பதவிக்கு பின்னர், அரசியலில் இருந்து முற்றிலும் விலகினார். 

விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் தனக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு அர்ப்பணித்து விட்டு வாடகை வீட்டில் குடியேறினார். அரசு வாகனங்களை புறக்கணித்து, மக்களோடு மக்களாக அரசுப்பேருந்தில் பயணித்தார். 

இதற்கிடையே, தனது அரசியல் குருவான வைத்தியநாத ஐயர் மறைந்த போது, அவரது மகன்கள் போல், தானும் மொட்டை அடித்து அவருக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தார். அவர் எவ்வளவு உயர் பதவியில் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மக்கள் மறக்கவில்லை. எனவே, ஐயருக்கு இறுதிச்சடங்கு செய்ய ஐயரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கக்கன் உறுதியாக இருந்தார். 

பின்னர் உறவினர்கள், ஐயரின் மகன்களை அழைத்து, கக்கன் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று கூறினர். அப்போது, ஐயரின் மகன்கள், "எங்களைப் போன்று கக்கனும் ஐயருக்கு மகன் தான். எனவே, அவருக்கும் இறுதி சடங்கு செய்ய உரிமை இருக்கிறது" என்று கூறிவிட்டனர்.  பலத்த எதிர்ப்புக்கிடையே வைத்தியநாத ஐயருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார் கக்கன். உயர்ந்த நிலைக்கு சென்றாலும், தன்னை வளர்த்துவிட்டவரை மறக்காத நன்றி மறவா உத்தமர் கக்கன். 

தனது இறுதி காலக்கட்டத்தில் நோயுற்றபோது, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். அப்போது மதுரை முத்துவை காண, எம்.ஜி.ஆர் அங்கு வந்தார். அவர் மூலமாக, கக்கன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையறிந்து, உடனே நேரில் சென்று கக்கனை சந்தித்தார். கக்கன் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டதை பார்த்து கண்கலங்கினார். வேறு வார்டுக்கு மாற்றச் சொல்லி சரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால், கக்கனோ வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'நீங்கள் என்னை சந்தித்ததே மிக்க மகிழ்ச்சி' என்று கூறிவிட்டார். 

அரசியலில் நல்ல பதவியில் இருக்கும் போது, சொகுசாக வாழ நினைப்பவர்கள், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில், "என் உயிர் மூச்சு உள்ளவரை மக்கள் பணியே.." என்று மக்களுக்காவே வாழ்ந்து, இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் கக்கன் என்பதில் எந்த ஐயமும் இல்லை..

1907ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்த அவருக்கு இன்று 112வது பிறந்த தினம். 'தனக்காக, தன் குடும்பத்திற்காக..' என்றில்லாமல் 'நாட்டுக்காக..நாட்டு மக்களுக்காக..' என்று வாழ்ந்த அவரை இந்நாளில் நினைவு கூர்வோம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close