உயிர் காக்க ஹெல்மெட் அணிவதை காட்டிலும், வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேச ஏதுவாக இருக்கும் என்பதற்காகத் தான் நம்மில் பலர் ஹெல்மட் அணிகின்றனர். இதனால் போக்குவரத்து காவலர்களிடமிருந்தும் எளிதாக தப்பித்து விட முடிகிறது. இந்த மோசமான பழக்கத்தின் விளைவாக கிருஷ்ண கிரியை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த பயங்கர சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள புளியரிசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சமீபத்தில் ஓசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
சூளகிரி அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதனையடுத்து பெரும்பாலான வாகன ஓட்டிகள் போலவே செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்த படி பேசியவாறு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல் போன் வெடித்துள்ளது. இந்த விபத்தில் ஆறுமுகத்தின் தலை, காது, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
newstm.in