நீட் மசோதாக்கள் தொடர்பாக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 12:09 pm
tn-govt-will-file-case-against-central-govt-for-neet-exam-issue

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கேட்ட பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார். 

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஒரு மசோதாவை குடியரசுத்தலைவர் நிராகரித்து அனுப்பிவிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் வேறு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பிவைக்க வழிவகை உள்ளது. அதன்படி, மீண்டும் நீட் மசோதா நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 12 கடிதங்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளன. 

திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும். மத்திய அரசிடம் இருந்து விளக்கம் வந்தபின்னர் அதற்கேற்ப வழக்கு தொடர முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், 'ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறேன். இந்த விவகாரத்தில் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டவும் அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close