அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவ விழா கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அத்தி வரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர், "அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். தமிழக அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். காஞ்சிபுரம் ஆச்சார்யர்களும் அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் ஏராளமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க காத்திருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வைபவம் முடிந்தவுடன் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in