சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் உரையை நேரலையில் ஒளி பரப்புவதை தவிர்த்த சென்னை பொதிகை தொலைக்காட்சியின் உதவி இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்.1ஆம் தேதி சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் ஐஐடி வளாகத்தில் இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியின் உரையை டெல்லி உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் நேரலை செய்த நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டும் நேரலை செய்யவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்த சென்னை தூர்தர்ஷன், ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியின் உரையை நேரலை செய்யவில்லை என புகார் எழுந்ததையடுத்து, சென்னை பொதிகை தொலைக்காட்சியின் உதவி இயக்குநர் வாசுமதியை பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரதமரின் இரண்டு உரையையும் நேரலையில் ஒளிபரப்ப அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு நிகழ்வை தவிர்த்துள்ளதாகவும், இவரது சஸ்பெண்ட் செய்வதற்கான முடிவு மேலிடத்தில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அந்த செய்தியை ஒளிபரப்புவது குறித்து யோசித்ததாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து உதவி இயக்குநர் வாசுமதி எதுவும் தெரிவிக்கவில்லை.
Newstm.in