எச்சரிக்கை: மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம்

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 02:59 pm
warning-fishermen-should-not-go-to-sea-today-and-tomorrow

மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: "தென் தமிழகம் மற்றும் குமரி கடலையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான வடத்தமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 

இதனால், அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வட தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், தி.மலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 14 செ.மீ மழையும், பெரியநாயக்கம்பாளையத்தில் 12 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்துவரும் 3 தினங்களுக்கு மழை தொடரக்கூடும். நாளை மேற்தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close