தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 29 Oct, 2019 01:01 pm
heavy-rainfall-in-one-or-two-place-in-tamil-nadu

தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று இலங்கையையொட்டியுள்ள பகுதிகளில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி, தற்போது குமரி கடற்பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்துவரும் 24 மணி நேரத்தில் லட்சத்தீவுகள், மாலத்தீவுகளையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து வருகின்ற 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 7 செ.மீ மழையும், மாமல்லபுரத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா ஆகிய தென் மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தி.மலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை 
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடற்கரைபகுதி, குமரி கடற்பகுதி, மாலத்தீவுகள், தெற்கு கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 29,30, 31ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close