தமிழக அரசியலில் நாளையும் அதிசயம் நடக்கும்: ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 10:26 am
the-politics-of-tamil-nadu-will-be-a-miracle-in-future-rajini

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ஆனால் அதிசயம் நடந்தது. நாளையும் அதிசயம் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த்  கூறியுள்ளார். 

நடிகர் கமல்ஹாசனின் 60ஆம் ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் "உங்கள் நான்"  என்ற நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஒரு அறிவு ஜீவி என்றும், இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர யாராலும் முடியாது என்றும் புகழாரம் சூட்டினார். கமல்ஹாசனின் 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல என்றும் அவர் செய்த தியாகங்கள் ஏராளம் எனவும் கூறினார். நானும் பல கஷ்டங்கள் பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம் என தெரிவித்தார். 

கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். அதுமட்டுமின்றி நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.

ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. அவரது பேச்சு எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள் என கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 10 நாட்கள் கூட தாங்காது, 4, 5 மாதங்களில் ஆட்சி கவிந்து விடும் என சொல்லாதவர்களே இருந்திருக்க முடியாது. ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close