5,8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு: அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 03:22 pm
public-exam-to-tamil-english-and-maths-only-for-class-5-8-minister

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கல்வித்துறை சார்பில்  மாநில அளவிலான 62 - வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருச்சியில் இன்று துவங்கியது.  தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 2099 மாணவிகள், 2236 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி பல்கலைக்கழகத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். விளையாட்டு துறையில் சிறப்பாக பங்களிக்கும் 100 மாணவ, மாணவிகளை கல்லூரிகளில் இலவசமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு உயர் நிலை பள்ளிகளிலும் 10 கணினிகளும், மேல்நிலைப்பளிகளில் 20 கணினிகளும் இன்னும் ஒரு மாதத்தில் அமைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு, 7500 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழு நாள் பயிற்சி அளிக்கவும், அதே போல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற விஷயம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும். நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது.  5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வு மாணவர்களின் கல்வி திறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் இடை நிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழி வகுக்காது.

முதலமைச்சர் குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது, விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கைகள், தொழில் துறையில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் என எல்லா துறைகளிலும் இரவு பகல் பாராமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டிலும் இந்த அரசு தான் ஆட்சியில் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி  முதலமைச்சராவேன் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்கிற ரஜினியின் கருத்து குறித்தான கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை கனவு என்பது அல்ல, நினைவாக மாறியிருக்கிறது. எதிர் கட்சி தலைவர் பல முறை இந்த ஆட்சி விரைவில் போய்விடும் என கூறினார். ஆனால் சட்டமன்றத்தில் 122 பேர் இருந்த நாங்கள் தற்போது 124 பேராக இருக்கிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.மக்கள் உள்ளங்களில் முதலமைச்சர் நிறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது  காங்கிரஸ்,  தி.மு.க  தான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க வின் நிலைப்பாடு. ஆனால் ஆட்சிக்கு வராமலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close