இறந்ததாக நினைத்தவரை உயிரோடு மீட்ட திருச்சி போலீசார்! வைரலாகும் வீடியோ!

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 03:05 pm
police-video

திருச்சியில் நடந்த ஒரு விபத்தில் கீழே விழுந்த முதியவர் சுயநினைவின்றி இருப்பதை கண்டு இறந்துவிட்டதாக நினைத்த நிலையில், அங்கு வந்த ஒரு காவலர் எதையும் பொருட்படுத்தாமல் செயற்கை சுவாசம் அளித்து அவரை உயிரோடு மீட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

திருச்சி மாவட்டம் பிராட்டியூரை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள, அவரின் மகள் வீட்டிற்குத் தன் மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களின் வாகனத்தின் மீது அந்தவழியாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. நடந்த விபத்தில் யாருக்கும் பெரியளவு காயம் இல்லை. ஆனால், விபத்து ஏற்பட்ட இடத்தில் கீழே விழுந்த அப்துல் காதர் சுயநினைவின்றிக் கிடந்தார். அதைப் பார்த்த குடும்பத்தார் கதறி அழுதனர். கூடியிருந்தவர்களும் அவர் இறந்துவிட்டதாகவே நினைத்தனர்.

அப்போது, அங்கு வந்த காவலர் பிரபு மயங்கிக் கிடந்த அப்துல் காதரின் மார்பில் கைவைத்து அழுத்தினார். தொடர்ந்து, வாய் மூலம் செயற்கை சுவாசம் கொடுத்தார். அவரின் அடுத்தடுத்த முயற்சிகளால் அப்துல் காதர் கண்விழித்தார். இதைப் பார்த்த ஒருவர் எடுத்த செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

இது குறித்து காவலர் பிரபு கூறியதாவது "2013-ம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். மாநில பேரிடர் மீட்புப்படை படையிலும் உள்ளேன். விபத்து நடந்த இடத்தில் அப்துல் காதர் மயங்கிக் கிடந்தார். அவர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் இல்லை. ஆனால், அங்கிருந்தவர்கள் அவர் இறந்துவிட்டதாகவே நினைத்தார்கள். இதுபோன்ற சம்பவங்களில் விபத்து நடந்ததும் உடனடியாக முதலுதவி செய்து செயற்கை சுவாசம் கொடுத்தால் உயிரைக் காப்பாற்றலாம் என எங்களுக்கு வழங்கிய பயிற்சிகள் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதன்படி மயங்கிக் கிடந்த அப்துல் காதரின், இதயப் பகுதியில் கை வைத்து அழுத்தியதுடன், 3 நிமிடங்கள் செயற்கை சுவாசம் கொடுத்தேன். அதன் விளைவாக அடுத்த சில நிமிடங்களில் அப்துல் காதரால் நன்றாக மூச்சுவிட முடிந்தது. சிறிது நேரத்தில் அவர் கண்விழித்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

இதேபோல், கஜா புயல் பாதிப்பு நேரங்களிலும் முக்கொம்பு பகுதிகளில் பணியாற்றியபோதும் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். பொதுவாக, இப்படிச் செயல்படும்போது நம்மால் ஒரு உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு கிடைத்ததே எனக் கடந்து போய்விடுவேன். ஆனால், இந்த நிகழ்வு குறித்த வீடியோ வைரலாகி வருவதால் பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள். இது கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. இன்னும் பலரின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு இந்த உற்சாகம் போதும்" என கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close