உன்னாவ் பெண் வழக்கு! பாஜக. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பு!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:38 am
unnao-rape-case

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில்  எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி தீஸ் ஹசாரே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ’நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வந்த நிலையில், எதிர்க்கட்சியினர் இவ்விவகாரத்தை கையில் எடுத்தனர். இதையடுத்து லக்னோ நீதிமன்றத்தில் இந்த  வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வக்கீல், தாயாருடன் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது காரின் மீது லாரி மோதியதில் அவரது உறவுக்கார பெண் மற்றும் வக்கீல் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும்  9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண்  உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கற்பழிப்பு, விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, சிறை மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 1-8-2019 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்த பெண்ணுக்கு உத்தரபிரதேசம் மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் கார் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே,  குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த  பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த 9-8-2019 அன்று டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார்.

இதை தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பின்னர், இருதரப்பு வக்கீல்களின் வாதங்களும் முடிவடைந்த நிலையில்,  இன்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில் குல்தீப்சிங்  செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், குல்தீப் சிங்கிற்கான தண்டனை  வரும் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர இதர 4 வழக்குகளின் விசாரணை முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close