ஒரு பதவிக்கு 2 வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்... குழப்பத்தில் மக்கள்..

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 05:17 pm
victory-certificate-for-2-people-in-a-post

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டு முன்னணி நிலவரம் அடிக்கடி மாறி கொண்டே இருந்தது. 

இந்நிலையில் இரவு 10 மணிக்கு தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால், எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. பின்னர் காரைக்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். எதிர் தரப்பினர் அங்கேயே அமர்ந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து தேவி தரப்பினருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்தரப்பினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. இதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close