நீட் தேர்வில் வருமுன் காக்கத் தவறிவிட்டது தமிழக அரசு - ஜி.கே.வாசன்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:45 pm

gk-vasan-condemned-tn-govt-for-neet-exam

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு வருமுன் காக்கத் தவறிவிட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய, மாநில அரசுகள் கல்வியில் கொள்கை முடிவு எடுத்து மாணவ, மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாது என்றால், அதற்கேற்ப தேர்வு முறையைக் கொண்டுவந்து முறையாக, சரியாக நடத்த முன்வரலாம்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றுத்தர முன்வரவில்லை. மேலும் தமிழக அரசும் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை முன்னரே எடுத்து, விலக்கு பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதனையும் முறையே, காலத்தே செய்ய தமிழக அரசு தவறியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால் மனம் உடைந்து வியாழக்கிழமை தன் உயிரை மாய்த்துக்கொண்டது மிகுந்த வருத்தத்துக்கு உரியது.

ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து உயிரிழந்ததும் வேதனைக்குரியது. உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்குஆழ்ந்த இரங்கல். மேலும் தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வர வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும். மாணவர்கள் நாட்டின் வருங்கால தூண்கள். எப்பேற்பட்ட கஷ்டத்திலும், எதற்காகவும், படிப்பிற்காகவும் அல்லது வேறு எந்தப் பிரச்சினைக்காகவும் மனம் உடையாமல், தளராமல் தொடர்ந்து முயற்சித்து, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாணவர்கள் படிப்புக்காக மட்டுமல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்கக் கூடாது.

குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் கல்வியில் கொள்கை முடிவு எடுத்து மாணவ, மாணவிகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாது என்றால், அதற்கேற்ப தேர்வு முறையைக் கொண்டுவந்து, முறையாக, சரியாக நடத்த முன்வரலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசு இத்தேர்வு முறையை தமிழகத்தில் திணிக்க முயற்சித்திருக்கக் கூடாது.

அதேபோல தமிழக அரசும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவ, மாணவிகளின் மருத்துவப்படிப்புக்கு தடங்கலாக, இடையூறாக இருக்கின்ற நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாமல், தமிழகத்திலும் கட்டாயப்படுத்தப்பட்டு, முன்னேற்பாடில்லாமல் நடத்தப்பட்டு, குளறுபடிகள் நடந்து, அலைக்கழிக்கப்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் கல்வித்திட்டங்களில் கொள்கை முடிவோடு செயல்பட வேண்டும். அந்தக் கொள்கை முடிவுகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில மாணவர்களின் கல்வியில் முன்னேற்றத்தை படிப்படியாக கொண்டுவந்து, அதற்கேற்ப தேர்வு முறைகளைக் கொண்டுவர முயற்சிக்கலாம். அதனை விட்டுவிட்டு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வராமல், கால அவகாசம் கொடுக்காமல், உடனடியாகவோ, கட்டாயப்படுத்தியோ எந்த ஒரு தேர்வு முறையையும் மாநில மக்கள், மாணவர்கள், அரசு ஆகியவற்றின் எதிர்ப்பையும் மீறி திணிக்க முயற்சிக்கக்கூடாது” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close