மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத தமிழக அரசு: ஜி.கே.வாசன் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 07:05 pm

tn-govt-didn-t-consider-about-sand-robbery-says-gk-vasan

பல ஆற்றுப்படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது வெட்ட வெளிச்சமாயிருந்தும் அதனை கண்டும் காணாமல் தமிழக அரசு இருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மணல் தட்டுப்பாடும், மணல் கொள்ளையும் அதிகரித்துகொண்டே போனதாலும், ஆற்றுமணல் முறையின்றி அதிக அளவில் அள்ளப்படுவதால் நீர்மட்டம் குறைவதாலும், மணல் விலை உயந்துகொண்டே போனதாலும் கட்டுமானப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலையின்றி இருந்தனர். இச்சூழலில் மணல் கொள்ளை சம்பந்தமாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் தமிழக அரசு பொதுப்பணித் துறை மூலம் மணல் குவாரிகளை இயக்கி வருகிறது.

ஆனாலும் பல ஆற்றுப்படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது வெட்ட வெளிச்சமாயிருந்தும் அதனை கண்டும் காணாமல் தமிழக அரசு இருக்கிறது. அது மட்டுமல்ல பொதுப்பணித் துறையின் மூலம் இத்தனை ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ளலாம், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரை மணல் அள்ளக்கூடாது, குறிப்பிட்ட அளவு மணல் தான் அள்ள வேண்டும், மனிதர்களை கொண்டு தான் மணல் அள்ள வேண்டும் போன்ற விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இவையெல்லாம் முறையாக பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட ஆரணி ஆற்றில் மணல் எடுப்பதற்கும், கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதற்கும் டெண்டர் விடப்பட்டும் மணல் அள்ளுவதற்கு லாரிகள் இல்லை என்று கூறி, குத்தகைக்கு விடப்படுவதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு என்பதால், பொதுப்பணித் துறையின் நேரடி கண்காணிப்பில் மணல் அள்ளுவதற்கான முழு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட ஆறுகளில் இருந்து அளவுக்கு அதிகமான மணல் பல மடங்கு அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தபோதும் அது தொடர்பாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்.

மேலும் அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜிஎஸ்டி வரியும் சேர்த்து 840 ரூபாய். ஆனால் சந்தையில் ஒரு லோடு மணலானது குறைந்தது ரூபாய் 15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனையெல்லாம் தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை? என்ன காரணத்திற்காக மணல் விலையேற்றத்தை அனுமதிக்கிறது? மணல் விலை அதிகரித்தால் சாமானிய மக்களால் அவசியத் தேவைக்காகக் கூட கட்டுமானப்பணிகளை செய்ய முடியாது.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகளில் அளவான மணல் அள்ளப்படுவதற்கும், மனிதர்களை கொண்டு மணல் அள்ளவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறையானது மணல் விற்பனையில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகளையும், மணல் குவாரிகளையும் தொடர்ந்து கண்காணித்து, விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து, மணல் கொள்ளையை தடுத்து, மணல் விலையை அரசே நிர்ணயம் செய்தபடி, நியாயமான விலையில், குறைந்த விலையில், சாமானிய மக்களுக்கும் மணல் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் - தேவைக்கேற்ப, கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல், தடங்கல் இல்லாமல் காலத்தே, வெளிப்படையாக கிடைப்பதற்கும், ஆறுகளை பராமரித்து, அளவான மணலை மட்டுமே அள்ளி, நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close