தப்பித்தார் இபிஎஸ்; 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 02:10 pm
mlas-disqualification-case-transferred-to-3rd-judge

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சுந்தர் மற்றும் தலைமை நீதிபதி ஆகிய இருவரும் முரண்பட்ட தீர்ப்புகளை வாசித்ததால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமி அரசு தப்பியது.

சசிகலா சிறைத்தண்டனை பெற்ற பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி 16ம் தேதி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிரிந்திருந்த இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ல் இணைந்தது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மீது நம்பிக்கை இல்லை, அதே நேரத்தில் அ.தி.மு.கவில் வேறு ஒருவர் முதல்வராக வந்தால் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை எனக்கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, அ.தி.மு.கவின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக, கொறடா பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  18ம் தேதி தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்து  18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பல்வேறு கட்ட வாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று பகல் 1 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதன்படி, இன்று மதியம்  12 மணிக்கு முன்னதாகவே அ.தி.மு.க தரப்பு, தினகரன் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 15 பேர் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து நீதிபதிகள் சுந்தர், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிமன்றத்திற்கு வந்தனர். வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சரியா 1.40 மணியளவில் முதலாவதாக நீதிபதி சுந்தர் தீர்ப்பை வாசித்தார். அவர் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என கூறினார். தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா  பானர்ஜி தீர்ப்பை வாசித்தார். அவர், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தார். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு மறுபட்டுள்ளதால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு தெரிய வரும்.

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட தேசிய கட்சியைச் சேர்ந்த தலைவர் தீர்ப்பு எப்படி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்றார். அவர் சொன்னதுபோலவே தீர்ப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 3வது நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 20ல் நீதிபதி துரைசாமி வழங்கிய தீர்ப்பு தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என்பதாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close