எடப்பாடிக்கு நிம்மதி... மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Jun, 2018 04:52 pm

relaxing-to-edappadi-mk-stalin-disappointed

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி நிம்மதியையும், மு.க. ஸ்டாலின் ஏமாற்றத்தையும் அடைந்துள்ளனர்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு கூறினர். இதனால், தீர்ப்பு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியாக இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தற்காலிகமாக தப்பியுள்ளது.

ஆனால், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை, எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் தரப்பைவிட, அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தது எதிர்கட்சியான தி.மு.க-தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், செல்லும், அல்லது செல்லாது என எந்தவகையில் தீர்ப்பு வந்தாலும் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.

 
இதனை மனதில் கொண்டே விரைவில் அதிமுக ஆட்சி களையும் என வெளிப்படையாகவே கூறிவந்தார் தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.  தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வந்திருந்தால்.... காங்கிரஸ் கட்சியை சேர்த்து  மொத்தம் 98 உறுப்பினர்களை கொண்டுள்ளது திமுக. எப்படியும் இந்த ஆட்சியை களைத்து விடவேண்டும் என்கிற முடிவில் இருக்கும் டிடிவி தினகரன் அணியில் அவரையும் சேர்த்து 21 உறுப்பினர்கள் இருக்கிறார்.

அ.தி.மு.க  சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியையும் இணைத்தால் பலம் 122 ஆக உயர்ந்திருக்கக்கூடும். ஆனால், ஆனால் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவை. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசோ 110 உறுப்பினர்களைக் கொண்டு மைனாரிட்டி அரசை நடத்தி வருகிறது. ஆக, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில், டிடிவி.தினகரனோடு கைகோர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து  இந்த அரசை களைக்க காய் நகர்த்தி வந்தார் மு.க.ஸ்டாலின்.

தகுதி நீக்கம் செல்லும் என்றாலும் அது தி.மு.க தரப்பிற்கு சாதகமாகவே அமைந்திருக்கும். தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்திருந்தால் மேல்முறையீட்டிற்கு 18 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றம் சென்றிருக்கக் கூடும். அல்லது இடைத்தேர்தல் நடைபெற்றிருக்கும். அப்படி இடைத்தேர்தல் நடந்தால் இந்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் எடப்பாடி வேட்பாளர்கள் தோல்வியை மட்டுமே தழுவுவர். அப்போதும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும். இந்த வகையிலும் இந்த ஆட்சியை களைத்து விடலாம் என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இருந்தார் ஸ்டாலின். வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கிற நம்பிக்கையில் இருந்த மு.க.ஸ்டாலின் கணக்கு தற்காலிகமாக தப்புக்கணக்காகி விட்டது.  

ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் அவரது தந்தையைப்போல் நேர்த்தியாக கட்சியை நடத்தவில்லை. கருணாநிதி நலமாக இருந்திருந்தால் இந்த ஆட்சியை எப்போதோ களைத்திருப்பார் என தி.மு.க-வினரே விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி வந்தாலும் ஆட்சியை களைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்ததன் வெளிப்பாட்டினால்தான் எதிர்கட்சி தலைவராக இருந்தும் இந்த தீர்ப்பு குறித்து மீடியாக்களை சந்தித்து கருத்து கூறாமல், தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் கருத்து தெரிவித்துள்ளர். அதில், ‘ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான - நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.’ எனத்தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தின் மூலம் அவர் விரக்தியை வெளிப்படுத்தி இருப்பதை உணரமுடிகிறது.

 ஆக, இந்தத் தீர்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றத்தையும், எடப்பாடி பழனிச்சாமிக்கோ தற்காலிகமாக நிம்மதியைக் கொடுத்துள்ளது. தினகரன் அணிக்கோ நிம்மதியும் இல்லை, ஏமாற்றமும் இல்லை!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close