’சொத்து சம்பாதித்தது மிகப்பெரிய தவறு..’ சிறையில் புலம்பும் சசிகலா..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Jun, 2018 10:48 pm

the-biggest-mistake-made-by-the-property-sasikala-lamenting-in-jail

’’ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க’ என்கிற பழமொழி சசிகலாவுக்கு கச்சிதமாய் பொருந்தும். ஜெயலலிதாவின் தோழி என்ற ஒரே காரணத்தால் கோடி கோடியாய் சம்பாதித்து தனது ரத்த உறவு, மத்த உறவு, என மொத்த உறவுகளையெல்லாம் கோடீஸ்வரர்களாக செட்டிலாக்கி விட்டார் சசிகலா. 

இன்றைய நிலையில் தமிழகத்தில் அதிக கோடீஸ்வர உறவுகளை கொண்ட ஒரே குடும்பம் என்றால் அது சசிகலாவின் குடும்பமாகத்தான் இருக்க முடியும். இதனை அவரது குடும்ப உறவுகளே மறுக்க முடியாது. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு எடுத்துக்கொண்டால், அவருக்கும் வாரிசுகள் கிடையாது. அவர் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் அவரது உறவினர்களே அனுபவித்து வருகிறார்கள். அவரது அரசியல், சொத்துக்கள், கொள்கைகள் வேறு... 
அரசியலில் அவர் வழி வந்த ஜெயலலிதா எத்தனையோ கோடிகளை சம்பாதித்து வைத்து இறந்து போயிருந்தாலும் அதனை அனுபவிக்க அவருக்கும் வாரிசுகள் இல்லை. ஆக, ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்கவும் ஆட்களை இல்லை. ஆக, ஜெயலலிதா நேரடியாக சம்பாதித்த சொத்துக்கள்,ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சம்பாதித்த சொத்துக்கள் என  அனைத்தும் இருந்தும் சசிகலாவுக்கு என்ன பயன்..? பாவம், சசிகலாவுக்கும் நேரடி வாரிசுகள் இல்லாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

’இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்’ கதையாகி விட்டது தற்போது சசிகலாவின் நிலை. எப்படி எப்படியெல்லாமோ சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை ஆள வாரிசுகளும் இல்லை. அதை அவர் காலத்திலாவது அனுபவிக்க முடியாமல் சிறையில் வாடுகிறார். அவர் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் அவரது உறவுகள் உல்லாசமாக அனுபவித்து வருகின்றனர். 
சொத்துக்களை அனுபவித்ததோடு நிற்கிறார்களா உறவினர்கள்..? சிறையில் இருந்தாலும் சசிகலாவை நிம்மதியாக இருக்க விடாமல் இருக்கும் சொத்துக்களை எழுதி வைக்கச் சொல்லி துயரப்படுத்துவதாக கூறுகிறார்கள் சசிகலா நலம் விரும்பிகள்.

இதுகுறித்து மேலும் அவர்கள், ‘சசிகலா சம்பாதித்த சொத்துகளை அவர் பெயரில் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை. உறவினர்கள் பெயருக்கு பல சொத்துக்களை ஜெயலலிதா காலத்தில் இருந்தே பதிந்து, பகிர்ந்து கொடுத்து வந்தார். ஜெயலலிதா, சசிகலா பெயரில் பல சொத்துக்கள் இருந்தன. ஜெயலலிதா இறந்து, சசிகலா முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அடிமடியில் கைவைக்க தொடங்கினர் உறவினர்கள்.

’ஏற்கெனவே சொத்து சேர்த்த வழக்கு மேல் முறையீட்டில் இருக்கிறது. அத்தோடு முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறீர்கள். இந்த நிலையில் இவ்வளவு சொத்துக்களும் தங்களது பெயரில் இருந்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கும். சொத்து சேர்த்ததாக அம்மா இருக்கும்போதே அத்தனை துயரங்களை சந்தித்து விட்டீர்கள்..? அவர்கள் இறந்து விட்ட நிலையில் சொத்துக்களை உங்கள் பெயரில் வைத்துக்கொண்டால் அது உங்களுக்கும், உங்கள் பதவிக்கும் ஆபத்தாக முடியலாம்.

ஆகையால், எங்களது பெயரில் சம பங்காக சொத்துக்களை எழுதி வைத்து விடுங்கள். உங்களுக்கு தேவை என்று வரும்போது திரும்ப கொடுத்து விடுகிறோம்’ என  தினகரன், திவாகரன், வெங்கடேஷ், விவேக், கிருஷ்ணப்ரியா உள்ளிட்ட அனைவரும் நச்சரித்தனர். அவர்கள் சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அப்போதைய சூழலில் அதுதான் நல்லதும்கூட என்கிற முடிவுக்கு வந்தார் சசிகலா. நடராஜனிடம்கூட இது குறித்து ஆலோசனை கேட்டார் சசிகலா. இந்த விஷயத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஏதாவது முடிவெடுத்துக்கொள்ளுங்கள்’ என விலகி விட்டார் நடராஜன்.

அதன் பிறகு குறிப்பிட்ட சில சொத்துகளை மட்டும் தன் பெயரில் வைத்துக் கொண்டு அவரிடம் இருந்த முக்கால்வாசி சொத்துக்களை உறவுகளுக்கு எழுதிக்கொடுத்து விட்டார் சசிகலா.

 

இப்போது சசிகலா பெயரில் சில சொத்துக்களே இருக்கின்றன. அப்படி சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதால்தான், சசிகலாவின் பேச்சை அவரது உறவினர்கள் இப்போதெல்லாம் கேட்பதில்லை. திவாகரன், தினகரன், விவேக்  ஆகியோரிடையை ஈகோ யுத்தம் நடப்பதற்கு காரணம் இதுதான். சசிகலா மட்டும் சொத்துக்களை இவர்களுக்கு எழுதி வைக்காமல் இருந்திருந்தால் அவருக்கு பயந்து கொண்டு அமைதி காத்திருப்பார்கள். அதனால்தான் சசிகலா அட்வைஸை உதாசினப்படுத்தி ஆளாளுக்கு அரசியல் செய்து வருகின்றனர். 

ஜெயா டிவி உள்ளிட்ட சில சொத்துக்களில் சசிகலாவின் பங்கு அதிகம் இருக்கிறது. இப்படி இன்னும் சில சொத்துக்கள் இருப்பதால்தான், சில விஷயங்களில் மட்டும் சசிகலா பேச்சை கேட்டு நடப்பதுபோல், தினகரன், விவேக் உள்ளிட்டோர் நாடகமாடி வருகிறார்கள். இல்லை என்றால் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்து நலம் விசாரிப்பதையே இந்நேரம் நிறுத்தி இருப்பார்கள்’’என்கின்றனர்.

இப்போது சசிகலா பெயரில் மீதமிருக்கும் சொத்துக்களில் ஒன்றான ஜெயா டிவிக்கும் ஆபத்து வந்து விட்டது. ஆம், ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ் உட்பட நான்கு சேனல்களின் 80 சதவிகித பங்குகளை சசிகலா வைத்திருக்கிறார். இந்தச் சேனல்களின் உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு விண்ணப்பித்தும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இந்நிலையில், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவர்கள், ஒளிபரப்பு நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்தால், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆபத்து' என்ற கொள்கை முடிவைக் காரணம் காட்டிக் கடிதத்தை அனுப்பியுள்ளனர் தொலைத்தொடர்பு அதிகாரிகள்.

இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தைப் பிடித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். மே 25-ம் தேதி இது விசாரணைக்கு வந்தது.  ‘ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் பங்குதாரராக இருக்கக்கூடாது’ என உள்துறை அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்தது எங்களுக்குத் தெரியாது. இதை முன்பே சொல்லியிருந்தால், சசிகலா பெயரில் இருக்கும் பங்குகளை வேறு நபர்களுக்கு மாற்றியிருப்போம். எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல், நேரடியாக சேனல் ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிட்டது சட்ட விரோதம்’ என வாதாடிய கோபால் சுப்ரமணியம், மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை பெற்றுவிட்டார்.’’

‘‘வரும் செப்டம்பர் 7-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே கோர்ட் தடையை நீக்கி ஜெயா டி.வி-யை முடக்கும் வேகத்தில் இருக்கிறது மத்திய அரசு. சசிகலாவோ, தன் பெயரில் Mavis Satcom Ltd நிறுவனத்தில் இருக்கும் பங்குகளைக் கைமாற்றி விடும் எண்ணத்தில் இருக்கிறார்.

இந்த விவகாரத்தையடுத்து, ஜெயா டிவி-யின் பவரை யாருக்கு மாற்றுவது என்ற விவாதம் சிறையில் நடந்துள்ளது. அப்போது சசிகலாவிடம் பேசிய தினகரன் தரப்பினர், `ஜெயா டிவி பவரை நினைப்பவர்கள் பெயருக்கெல்லாம் மாற்ற முடியாது. கணவர் வழி உறவில் யாருக்காவதுதான் மாற்ற முடியும். பழனிவேலுவும் (நடராசனின் சகோதரர்) வெங்கடேஷும் ஏற்கெனவே இரண்டாண்டுகள் ஜெயா டிவி நிர்வாகத்தில் இருந்தவர்கள். அவர்களில் யாருக்காவது பவர் கொடுத்துவிடுங்கள். விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்' எனக் கூறியுள்ளனர்.

இதற்கு சசிகலா எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இப்படிச் சொல்வதற்குக் காரணம், 'ஜெயா டிவி-யின் பவரை விவேக் பெயருக்கு சசிகலா மாற்றிவிடக் கூடாது' என்பதுதான். எப்படியாவது ஜெயா டிவி-யை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என நினைக்கிறார் தினகரன். இந்த விவகாரத்தில் திவாகரனும் காய் நகர்த்தி வருகிறார்.

 

இருக்கும் சொத்துக்களை உறவினர்கள் பெயரில் எழுதி வைத்து விட்டு, கணவனையும் இழந்து சிறையில் வாடும் சசிகலா இப்போது ஜெயா டி.வி பங்குகளை யாருக்கு எழுதி வைப்பது என்ற குழப்பத்தால் இருக்கிறார். சொத்துக்களுக்காகத்தான் உறவுகள் கூடி வருகிறார்கள் என்பதை உணர்ந்துவிட்ட சசிகலா, ‘நான் செய்த மிகப்பெரிய தவறு சொத்து சேர்த்து வைத்ததுதான். அதை யார் யாரோ அனுபவிக்க நான் சிறையில் கிடந்து வாடுகிறேன்’ என சிறையில் சசிகலா புலம்புவதாக கூறுகிறார்கள்  மன்னார்குடி உறவுகள்.

ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுதான் என்கிற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சசிகலாவுக்கு சாலப்பொருந்தும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close