தமிழகத்தை நிலைகுலைய வைக்கும் சீமானின் பகீர் வியூகம்! - அரசு என்ன செய்யப்போகிறது?

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 05:11 pm

is-seeman-going-to-protest-against-central-govt-continuously

தொடர் போராட்டங்களால் தமிழகம் தள்ளாடி வரும் நிலையில், சில  சமூக அமைப்புகள் போராட்டங்களை புதிய வடிவில் முன்னெடுக்க இருப்பதால் பொதுமக்களை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.  

சமீப காலமாக தமிழகம் போராட்டத்திற்கான களமாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டிற்காக தொடங்கிய போராட்டம் கதிராமங்கலம், நெடுவாசல், விவசாயிகள் போராட்டம், நீட், ஸ்டெர்லைட் என பல போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை சில கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில  அரசுகளுக்கு எதிராக ஆவேசமாக தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.  இதனால், அவர்களது போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தும், தொடர்ந்து அவர்கள் சார்ந்த அமைப்பினர் கைது செய்யப்படுவதுமாக நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில், ’தமிழகத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அதனை யாரும் வெளிக்காட்டவில்லை. நெய்வேலியில் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், அந்த நேரத்தில் போலீசார் சரியான நேரத்தில் வந்து எங்களை தடுத்து விட்டனர். எனவே இனிமேல் பன்முகம் கொண்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஒரே நாளில், ஒரே இடத்தில் இல்லாமல் ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு இடத்தில், ஒரே நோக்கத்துக்காக போராட வேண்டும். போலீசாரும், அரசும் இணைந்து போராட்டங்களை தடுக்க விடாமல் செய்ய வேண்டுமானால் இதுவே ஒரே வழி. முதற்கட்டமாக எதற்காக போராட்டம் என்று முடிவெடுத்து விட்டு பின்னர் யார் யார் தலைமையில் எந்த தேதியில் போராட்டம் என்பதை பின்னர் பகிர்ந்துகொள்ள வேண்டும்" என்று போராட்டத்திற்காக புதிய யுக்தியை அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். 

போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடக்கும் சூழலில், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்கு பதில், போலீசார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியிலேயே அதிகம் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த சூழலில், ஒரே நாளில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினால், ஒட்டுமொத்த போலீசும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதிலேயேதான் கவனமாக இருப்பார்கள். இது சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டத்தைத்தான் அளிக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசியல் அரசியல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து வருகின்றன.  அதன்பிறகு, தினகரன், ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவுகளாகிக் கிடக்கிறது அ.தி.மு.க. இதனையடுத்து அ.தி.மு.க ஆட்சியை ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவும் அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வெற்றிடத்தை தாங்கள் நிரப்பப்போவதாக பல்வேறு தரப்பினரும்  புதிய கட்சிகள், அமைப்புகளை  உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் தொடர் போராட்டங்களை வருமுன் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ரகசியம் காத்து திடீர் போராட்டங்களாக வெடிக்க வைத்து அதன் மூலம் தங்களது அமைப்புகளை மக்கள் மத்தியில் வலுவாக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர். ..

ஏதுமறியா மக்களை பகடைக்காயாக மாற்றி போராட்டத்தில் ஈடுபட வைத்து அவர்களையும் சிக்கலில் இழுத்து விடுவதாக சில அமைப்புகள் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.  இதுபோன்ற சுயநல அமைப்புகளிடம் சிக்கி பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்களது அமைப்புகளை கட்டமைக்க, மக்களின் வாழ்க்கையை கட்டுடைக்கும் கொடுமைகள் பரவலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக நடைபெற்ற போராட்டங்களின் போதே பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ரகசிய திடீர் போராட்டங்களை இதுபோன்ற அமைப்புகள் நடத்தினால், அது பொதுமக்களை மேலும் பாதிக்கும். இந்த ரகசிய போராட்டம் மேலும் சிக்கலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. 

சீமான் மிக வௌிப்படையாகவே தன்னுடைய புதிய போராட்ட முறையை அறிவித்துவிட்டார். ஒரே நாளில், விமான நிலையம், ரயில் நிலையம், தபால்நிலையம், பஸ் நிலையம், மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் போராட்டங்களை நடத்தப்போகிறார்கள். என்று என்பது மட்டும்தான் தெரியவில்லை. உளவுத் துறை இனி என்ன செய்யப்போகிறது? இதுபோன்ற புதுயுக்தி போராட்டங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசும் காவல்துறையும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close