ரஜினி, கமலைத் தொடர்ந்து மீண்டும் ’தூக்கம் களைக்கும்’ கார்த்திக்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Jun, 2018 07:42 pm

actor-karfthik-again-political-entry

முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் அறிவித்துள்ளார். 

பரபரப்பாக அரசியல் களத்தில் குதித்து காமெடி அரசியல்வாதியாக மாறியவர் நடிகர் கார்த்திக். ஆரம்பத்தில் இவர் ’சரணாலயம்’ என்ற அமைப்பை தொடங்கியபோது பெரும் கட்சிகளே கதிகலங்கின. அப்படியொரு கூட்டம் அவர் பின்னால் அணிவகுக்க தயாராக இருந்தது. பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். ஆனால், அங்கு அவரால் கரைகாண இயலவில்லை. கட்சியை விட்டு நீங்கியதால், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். பொதுக்கூட்டங்களுக்கு அறிவித்து விட்டு அந்த ஊர்களுக்கு செல்வார். பின்னர் பொதுக் கூட்டங்களில் பங்கேற்காமல் ஹோட்டல் அறையிலேயே தூங்கி விடுவார். தன்னைக்கண்டு பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் பயப்படுவதாக தெரிவிப்பார். 

இப்படி செயல் ஒன்றும் பேச்சு ஒன்றுமாக இருந்ததால் அவரது ஆதரவாளர்கள் இவரை விட்டு விலகிச் சென்றனர். அடுத்து, தேர்தல் நேரத்தில் மட்டும் வலம் வந்து கொண்டிருந்தவர் மெல்ல அரசியலைவிட்டே ஒதுங்கி சில படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் தான் முழுநேர அரசியல்வாதியாகப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘எனது அப்பா முத்துராமனுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் என் மகன் கவுதம் கார்த்திக் என்னுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதிநேர அரசியலில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும். இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீப காலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம். இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.

 இனி அரசியல் களத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close