எம்.பி சீட்டை பறித்த விஜய்யின் ’சர்கார்’... தயாநிதி மாறனை ஒதுக்கும் மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Jul, 2018 08:00 am

vijay-s-sarkar-issue-dhayanidhi-maran-is-allocated-by-m-k-stalin

தனது உறவினர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தயாநிதி மாறனை கட்டம்கட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக கட்சியில் இருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைய எடுத்து வரும் முயற்சிகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார் ஸ்டாலின். அடுத்து தி.மு.க மகளிரணி செயலாளராக இருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழியை கட்சிப்பணிகளில் இருந்து ஸ்டாலின் முடக்கி வருவதாக கூறப்பட்டது. இதனை உணர்ந்த கனிமொழி, தன்னிச்சையாக முடிவெடுத்து மாவட்டம் தோறும் சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார். 

இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ’கருணாநிதியின் மனசாட்சி’ என வர்ணிக்கப்பட்ட முரசொலி மாறனின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் ஒதுக்கும் முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. 

கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தயாநிதிமாறன். இரண்டு முறையும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. அடுத்து 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வியை தழுவினார். அதன் பிறகு தி.மு.கவின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அடுத்து தம்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை எதிர்க்கொண்டு விடுதலையானார். அடுத்து தனது அலுவகலம் சார்ந்த வேலைகளை கவனித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலைப்போல கோட்டை விட்டுவிடக்கூடாது எனக் கருதும் மு.க.ஸ்டாலின் மக்களை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை இப்போதே தொடங்கி வருகிறார். அதன் முதல் கட்டமாக தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து தனியார் அமைப்பிடம் சர்வே நடத்தும் பணியை ஒப்படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய சென்னை தொகுதியை மீண்டும் தனக்கே ஒதுக்கக்கோரி தயாநிதி மாறன்  மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தேர்தலில் தயாநிதிக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஸ்டாலின்.

அதற்கு வெளிப்படையாக ஸ்டாலின் தரப்பினர் கூறும் காரணம் ‘கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு கட்சிப்பணிகளில் தயாநிதி மாறன் அதிகம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருக்கு சீட் கொடுக்க தலைமை மறுக்கிறது’ எனக் காரணம் கூறப்படுகிறது. 

தயாநிதிக்கு சீட் இல்லை என ஸ்டாலின் முடிவு எடுத்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள் உடன் பிறப்புகள்.
கலைஞர் இருக்கும்போது டெல்லி அரசியலை கவனித்து வந்தவர் முரசொலி மாறன். அவருக்குப்பிறகு அந்த வாய்ப்பை மாறனின் இளைய மகன் தயாநிதிக்கு வழங்கினார் கருணாநிதி. ஆனால், கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும் தி.மு.க-வை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டனர். பல்வேறு எதிர்ப்பையும் மீறி கருத்துக் கணிப்பை வெளியிட்டனர். இதனால், பத்திரிகை அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது. மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு, தி.மு.க-வில் இருந்து தயாநிதிமாறன் ஒதுக்கியே வைக்கப்பட்டார். பின்னர், குடும்பம் ஒன்று சேர்ந்தது தனிக்கதை.

அவர், உடல் நலம் குன்றியிருக்கும் இப்போதைய நிலையில், தி.மு.க சார்ந்த அனைத்து முடிவுகளையும் ஸ்டாலின் எடுத்து வருகிறார். கருணாநிதியை போல குடும்ப உறவுகளை அரவணைத்து செல்லும் மன நிலையில் ஸ்டாலின் இப்போது இல்லை. அடுத்த சந்ததிகள் வந்துவிட்டதல்லவா..? ஆனாலும், குடும்ப அரசியலை ஸ்டாலின் கைவிட்டுவிட்டதாக அர்த்தமில்லை. இப்போது அவரது, மருமகன் சப்ரீசன், மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த முற்படுகிறார் ஸ்டாலின். 

அந்த வகையில், கருணாநிதிக்கு அவரது மருமன் முரசொலி மாறன் போல, ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பல பிரச்னைகளில், ஊடகத்துறையையும் கவனித்து வருகிறார் சபரீசன். கலைஞர் டிவி டி.ஆர்.பி ரேட்டிங்கில் பல இடங்களுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், சன் டிவியை நம்பி இருந்தால் பலனளிக்காது என்பதை தி.மு.க கூடாரம் சில சம்பவங்களை வைத்து உணர்ந்ததாம். இந்த நிலையில், சபரீசனின் அறிவுறுத்தலின்படி, மேலும் 500 கோடி ரூபாயை ஒதுக்கி கலைஞர் டிவியை மேம்பத்தும் பணிகளும் நடந்து வருகிறது. அதற்கு ஜூனியர் விடகனில் ஆசியரியராக இருந்த  திருமாவேலனை கலைஞர் டிவியின் புதிய தலைமையாக அமர்த்தி இருக்கிறார்கள்.

 

அத்துடன் அனைத்து  தொலைக்காட்சி உரிமையாளர்களுடனும் நெருக்கம் காட்டி வருகிறாராம் சபரீசன். அதனால்தான், அனைத்து தொலைக்காட்சிகளும், மு.க.ஸ்டாலின் செய்திகளுக்கு அவ்வப்போது முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில், சன் டிவியை மட்டும் நம்பி பலனில்லை என ஸ்டாலின் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. திமுக தலைமையும், சன் தொலைக்காட்சியை விட,நடுநிலை ஊடகங்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கணக்கு போடுகிறது.

எனவே, தயாநிதிமாறனை ஒதுக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலினிடம் முக்கிய நிர்வாகிகள் அவ்வப்போது ஓதி வருகிறார்களாம். இந்த நிலையில், ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் திரைப்படம் எடுப்பதும், ரஜினிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து சன் நியூஸ் செய்திகளை ஒளிபரப்புவதும் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்தோடு டி.டி.வி. தினகரன் பற்றிய செய்திகளை சன் டிவி ஒளிபரப்புவதும் மு.க.ஸ்டாலின்  கண்களை உறுத்துவதாக கூறுகிறார்கள். 

அதை விட முக்கிய காரணமாக சர்கார் படத்தை கூறுகிறார்கள். விஜய் நடித்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் நிலையில், ரஜினி, விஜய் படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருதை ஸ்டாலின் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் விஜய் படத்தை நேரடி அரசியல் படமாக தயாரித்து இருப்பதன் பின்னணியில் தனக்கு எதிரான அரசியலை மாறன் பிரதர்ஸ் முன்னெடுப்பதாக ஸ்டாலின் சந்தேகிப்பதால் தயாநிதி மாறனை ஸ்டாலின் ஒதுக்கி வைக்க நினைக்கிறார்’’ என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான உடன்பிறப்புகள்!

ஜெயலலிதா இறந்த பின்புதான் அ.தி.மு.க பல பிரிவுகளை கண்டது. ஆனால், கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே ஸ்டாலினின் நடவடிக்கைகளால் தி.மு.க பல பிரிவுகளாக சிதறி விடுமோ என்கிற கலக்கத்தில் தவிக்கிறார்கள் கழக உடன் பிறப்புகள்..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close