தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஜனநாயகம் அல்ல... பணநாயகம்- அன்புமணி ராமதாஸ்

  சுஜாதா   | Last Modified : 02 Jul, 2018 05:57 am
anbumani-ramadoss-talks-about-tamilnadu-politics

ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தல்களிலும் பணம் விளையாடியது என்றும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை என்றும் அத்தேர்தலை நடத்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடைபெறும் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல... மாறாக பணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.

தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 2016-ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ரூ.10,000 கோடி அளவுக்கும், தி.மு.க. ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன. விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பணம் கொடுத்து பெற்ற வெற்றியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும். தேர்தலில் பெரும் சவாலாக இருந்த படைபலம் ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், பணபலம் தான் நியாயமான, சுதந்திரமான தேர்தலுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் சவாலாக உருவாகி உள்ளது. தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 1998-ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று வரை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. உண்மையான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்காவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. தேர்தல் சீர்திருத்தங்களில் முதன்மையானது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பது ஆகும். ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்; எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் அத்தனை முறை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். 10% தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் தகுதி நீக்கப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இவை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close