மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 05:47 pm

vaiko-urged-railway-to-stop-all-trains-in-manapparai

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ செட்டியாரால் தொடங்கப் பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும் மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மணப்பாறை, திருச்சியிலிருந்து 45 கிமீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கிமீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கிமீ-க்கு இடையில் மணப்பாறை ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.

அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. அதனால்தான் மணப்பாறை ரயில் நிலைய ஸ்டாலில் விற்கப்பட்ட மணி ஐயர் தயாரித்து வழங்கிய மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் காந்தி மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று காந்தி பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை ரயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல்வெட்டாக நிலைத்து நிற்கின்றது. இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி ம.தி.மு.க ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு திருச்சி ரயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் பேசியதும், அன்றைய தினமே இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்கும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்ததும் நினைவு கூறத்தக்கது.

இதனிடையே, தற்போது பகல் நேரத்தில் சென்னை பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ள மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை துரித ரயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி துரித ரயில், அண்மையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட அந்த்யோதயா ரயில் உள்பட அனைத்து ரயில்களையும் மணப்பாறையில் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகின்றது.

மேலும் திருச்சிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கட்டடத் தொழிலாளர்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு மற்றுமொரு புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை வரும் புதன்கிழமை மதிமுக சார்பாக ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.

ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close