உச்ச நீதிமன்ற தீர்ப்பு 100க்கு 110% பொருந்தும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 03:37 pm

puducherry-cm-narayanasamy-welcomes-sc-verdict-on-delhi-issue

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று, மேலும் இந்த தீர்ப்பு  100க்கு 110% பொருந்தும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பான வழக்கில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லியைப்போன்று புதுச்சேரியிலும், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் இருப்பதால் அம்மாநிலத்திற்கும் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பின் மூலமாக உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநர் அதிகாரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 100க்கு 110% பொருந்தும்.

கோப்புகளை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. துணை நிலை ஆளுநருக்கு எந்தவிதமான தனி அதிகாரமும் கிடையாது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதினேன். ஆனால் யாரிடம் இருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் யாரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளது. 

அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்திற்கும்  பொருந்தும் என விளக்க குறிப்பில் கூறியிருக்கிறார்கள். அதிகாரிகளை அழைத்து தினமும் கூட்டம் போடுவதை ஆளுநர் கிரண்பேடி நிறுத்திக்கொள்ள வேண்டும். கோப்புகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட செயலாளரை அழைத்து பேசுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. எனவே இனிமேலாவது ஆளுநர் எல்லை மீறி செயல்படக்கூடாது" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close