டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும்: அன்புமணி

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 06:16 pm
anbumani-ramadoss-condemned-for-online-tnpsc-exams

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.  இதற்காக விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நன்மைகளை விட அதிக தீமைகளை ஏற்படுத்தக்கூடிய அரசின் இம்முடிவை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட தாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆணையம் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் இந்த நோக்கம் நல்லது தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையிலான தாள்களின் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதில்லை. அத்துடன் அத்தகைய தாள்கள் கணினி மூலம் தான் திருத்தப்படும் என்பதால் அதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எழுத்து மூலம் விடையளிக்கும் முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தான் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது.

உதாரணமாக, 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் அடுத்த இரு மாதங்களில் அதாவது, ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், அதே ஆண்டின் அக்டோபரில் நடைபெற்ற முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் 9 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. இதற்குத் தான் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான தீர்வு என்பது விடைத்தாள்களை திருத்தும் பணியை விரைவுபடுத்துவது தானே தவிர, ஆன்லைன் தேர்வு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை சரியான விடையை தேர்வு செய்து எழுதும் முறையில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஓரிரு மணி நேரத்தில் வெளியிட முடியும் என்பது வரப்பிரசாதம் தான். ஆனால், அதை விட பல மடங்கு ஆபத்து உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில், போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும் தான் தேர்வாணையத்தின் பணி என்றும், அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவதில் தொடங்கி தேர்வு அறையில் குடிநீர் வைப்பது, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவே இருப்பார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ஒரு தேர்வு மையத்திற்கு ஒரே ஒரு பார்வையாளர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுவார் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நடைபெறும் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடக்காது என்று நம்புவது மூட நம்பிக்கையாகவே அமையும்.

போட்டித்தேர்வுக்கான வினாத் தாள்களை கணினிகளில் பதிவேற்றம் செய்வதற்காக அவை ஓரிரு நாட்களுக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் போது வினாத்தாள்கள் கசிய வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் தேசிய அளவிலும், வட இந்தியாவிலும் நடத்தப்பட்ட பல ஆன்லைன் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அவ்வாறு தான் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் எழுத்து மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலேயே சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி வினாத் தாள்களை முன்கூட்டியே கைப்பற்றி தங்களிடம் படிப்பவர்களுக்கு மட்டும் வழங்குவது, விடைத்தாள்களை மாற்றுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு, அதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு இருக்கும்போது, இப்போது தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்தால், கடந்த காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பயிற்சி நிறுவனங்களே தங்களின் பினாமிகள் மூலம் இந்த ஒப்பந்தத்தைப் பெற்று முறைகேடுகளை செய்வதற்கு வாய்ப்புள்ளது. இதை மறுக்க முடியாது.

அதுமட்டுமின்றி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2, சித்த மருத்துவர்கள் நியமனத் தேர்வு உள்ளிட்ட சில தேர்வுகளை தனியார் கல்லூரிகளுடன் இணைந்து ஆன்லைன் முறையில் நடத்தியது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், அதை மறைப்பதற்காக தேர்வு எழுதாத மாணவர்களும் தேர்வு எழுதியதாக கணக்குக் காட்டி தேர்ச்சி வழங்கப்பட்ட கொடுமை நடந்தது. இப்போதும் அதேபோன்று முறைகேடுகளும், ஊழல்களும் நடக்கக்கூடும். அது தகுதியும், திறமையும் உள்ளவர்களை பாதிக்கும்.

போட்டித்தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது வளர்ச்சியின் அடையாளம் தான். அதை பாமக எப்போதும் வரவேற்கிறது. ஆனால், தேர்வு நடத்தும் பணியை தனியார் நிறுவனங்களிடம் வழங்காமல், அதற்கான கட்டமைப்பு வசதிகளை அரசுப் பணியாளர் தேர்வாணையமே உருவாக்கி, அப்பழுக்கற்றவர்களின் கண்காணிப்பில் நேரடியாக ஆன்லைன் தேர்வுகளை நடத்த முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close