தமிழகத்தில் தாமரை மலருமா? வலுவாக களமிறங்கும் பாஜக!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Jul, 2018 03:32 pm

lotus-flower-in-tamil-nadu-bjp-launches-new-way

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, இல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பா.ஜ.க களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

வரும் நாடாளுமன்றத்தேர்தல் குறித்து வியூகம் அமைக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சென்னை வந்திருந்தார். ஈஞ்சம்பாக்கத்தில் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‘தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம். கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலில் சிறை சென்றுள்ளனர். தமிழகத்தில் சாதிவாதம், வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்போம்.

செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவோம். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி பேச்சு உள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச்சுக்குள் பாஜக எங்கே இருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் பார்ப்பார்கள். விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து யார்  காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்’’ என அவர் பேசினார். 

அவரது இந்தப்பேச்சு நாடாளுமன்றத்தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு வியூகங்களை எழுப்பி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் சிறை சென்றுள்ளதாக சாடியுள்ளார். அவர் ,  குறிப்பிட்டது ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆன ஆ.ராசா, கனிமொழியையா அல்லது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவையா? என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள். பொதுவாக தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம் என்றும், சிறை சென்றதைக் குறிப்பதாலும் ஒரே நேரத்தில் அவர் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்க்கிறார்’ எனக் கூறப்படுகிறது. 

தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வாய்ப்புகள் குறைவு. அதேவேளை அ.தி.மு.க அரசுடனும், கட்சியுடனும் இணக்கமான உறவைப் பேணும் பா.ஜ.க, புதிய கூட்டணிக்கு அச்சாரமிடுவதாக அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க சந்திக்கும் வழக்கமான எதிர்ப்புகளுடன், அ.தி.மு.க ஆட்சி மீதான அதிருப்தியும் தங்களை பாதிக்கும் என்பதையும் பா.ஜ.க உணர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.க கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்த உறுதியேற்க வேண்டும் என அவர் கூறியிருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி பேச்சுகளுக்கு திராவிடக் கட்சிகள்தான் காரணம் என பா.ஜ.க தலைமை நினைக்கிறது. ஆகையால், தமிழக மக்களின் கோபத்தை தணிக்க என்ன செய்யவேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார் அமித்ஷா. 

அத்தோடு மட்டுமில்லாது தமிழகத்தில் இருக்கும் மொத்தம் 65,616 பூத்களில் ஒவ்வொரு பூத்களுக்கும் தலா 15 உறுப்பினர்கள். அவர்களில் 5 பேர் பெண்கள். ஐந்து பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் என மொத்தம் 13,056 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அமித்ஷாவின் இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூத்வாரியாக தங்களது கட்சியை வலுப்படுத்தும் வேலையைத் தொடங்கி இருக்கிறது. ஆகவே, பாஜக தலைமையில் அ.தி.மு.க, தி.மு.க, கட்சி இல்லாத கூட்டணியை பா.ஜ.க அமைக்க விரும்புவதையே அமித் ஷாவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் பா.ஜ.கவினர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க, அ.தி.மு.க-வைத் தவிர்த்து ம.தி.மு.க, பா.ம.க, ஏ.சி.சண்முகம், எஸ்.ஆர்.எம் பாரிவேந்தர் என உதிரி கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்தது பா.ஜ.க. அந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாசும் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றிபெற்றனர். பல தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு கடும் போட்டியை பா.ஜ.க கூட்டணி அளித்தது.  

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. அதற்கு, தனித்து கூட்டணி அமைத்தால் அந்த இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

newstm.in  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close