அமித் ஷா அப்படி சொல்லி இருக்க மாட்டார்  ஹெச். ராஜா மாற்றி சொல்லியிருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

  சுஜாதா   | Last Modified : 11 Jul, 2018 06:28 am
minister-jayakumar-blames-h-raja


 ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதைத்தான் ஊழல் என்று அமித் ஷா சொல்லியிருப்பார். அவர் இந்தியில் பேசியது யாருக்கும் புரியாது. மொழிபெயர்ப்பு செய்த ஹெச் ராஜா ராஜா மாற்றி சொல்லியிருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்,   

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு மீன்வளத்தை பெருக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகள் கொல்கத்தாவில் விரும்பி சாப்பிடப்படுகின்றன. மழைக் காலத்தில் மீன் உற்பத்தி அதிகரிக்கும். அதனால், தரிசு நிலங்களில் மழைக்காலங்களில் மீன் வளர்ப்பை ஊக்குவித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்தும் நோக்கத்திலும், வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இளைஞர்கள் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மலின் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

நம் மாநிலத்தில் 70 சதவீதம் மட்டும் தான் மீன் பிடிக்கிறோம். 30-40 சதவீதம் நமக்கு தேவை இருக்கிறது. அப்படியிருக்கும்போது பதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிகமாக இருந்தால் தான் மீன்களை பதப்படுத்த வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரம் இது. பொதுமக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காக மீன்வளத்துறை, ஜெ.ஜெயலலிதா மீன்வளத் துறை பல்கலைக்கழகம், உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து துறைமுகங்களில் இருந்து மீன் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு நடத்தி அவற்றில் ஃபார்மலின் இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம், கட்சி அதிமுக என்றும், ஊழல் நிறைந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என தமிழகம் வந்திருந்த அமித் ஷா கூறியிருக்கிறாரே?

பாஜகவை பலப்படுத்த வேண்டி அக்கட்சியின் தலைவர் தமிழகம் வந்திருந்தார். அவர் இந்தியில் பேசியது யாருக்கும் புரியாது. மொழிபெயர்ப்பு செய்தவர் ஹெச் ராஜா. நுண்நீர் பாசனம் என்பதை சிறுநீர் பாசனம் என்றிருக்கிறார். அமித் ஷா அரசை நல்லதாக சொல்லியிருந்தாலும் ஹெச். ராஜா மாற்றி சொல்லியிருப்பார். ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதைத்தான் ஊழல் என்று அமித் ஷா சொல்லியிருப்பார். அரசையோ குறிப்பிட்ட துறையையோ அவர் சொல்லவில்லை. திமுக தான் திருமங்கலம் ஃபார்முலாவை ஆரம்பித்தது. டோக்கன் கிங் டிடிவி தினகரன் இந்தக் கலையில் கெட்டிக்காரர். அவர்களை பற்றி அமித் ஷா சொல்லியிருக்கலாம். அரசைக் குறிப்பிட்டு சொல்லியிருந்தால் நாங்கள் பதில் சொல்வோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close