கமல், அன்புமணி, டி.டி.வி.தினகரன் புதிய கூட்டணி.. பின்னணியில் இப்படியொரு செண்டிமெண்டா..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 08:25 pm

kamal-anbumani-ttvdhinakaran-new-coalition

நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன், அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் இணைந்து புதிய அணியை உருவாக்கி களமிறங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அ.தி.மு.க- பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலை. கமல் சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து வந்தார். இந்த சந்திப்பில் கூட்டணி பற்றிய பேச்சுகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், இம்முறை மத்தியில் ஆட்சியை அமைத்தே தீரவேண்டும் என்கிற முடிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, களத்தில் இறங்கி செல்வாக்கை நிரூபிக்காத கமலுடன் கைகோர்ப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. 

அதிமுக பிளவு பட்டுக்கிடப்பதோடு, அக்கட்சி நடத்தும் ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பாஜகதான் அதிமுகவை பின்னிருந்து இயக்குகிறது என மக்கள் நம்புகிறார்கள். பாஜகவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் வேளையில், அந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டுமானால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றியடைய முடியும் என தீர்க்கமாக காங்கிரஸ் நம்புவதாக கூறப்படுகிறது. ஆகையால் கமலின் கூட்டணிக்கோரிக்கையை முக்கியமாக பார்க்கவில்லை.

அ.தி.மு.க-வோ, தி.மு.க.வோ இருகட்சிகளும் இருக்கும் இடத்தில் கூட்டணி சேர்ந்தால் டி.டி.வி.தினகரனுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகும். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும். ஆகையால் அவர் இந்த கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டார். பாஜகவுடன் ஜென்மத்திலும் கூட்டணிபோட விரும்ப மாட்டார்.  அதேபோல அதிமுக, திமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சே கூடாது என்கிற முடிவை பாமக இளைரணித் தலைவர் அன்புமணியும்  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க –தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பா.ம.க களம் இறங்கியது. போட்டியிட்ட தொகுதிகளில் தருமபுரியில் அன்புமணி தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வியை தழுவியது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து பா.ம.க. களம் இறங்கியது. ஒரு தொகுதியில் கூட பா.ம.க வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசால்கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதுள்ள எம்.பி தொகுதியையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் என்கிற முடிவுக்கு பா.ம.க. வந்துள்ளது.

 

கடந்த சில வருடங்களாகவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை அன்புமணி கடுமையாக விமர்சித்து வருகிறார். மு.க.ஸ்டாலின் தன்னுடன் நேருக்கு நேர் விவாத்திற்கு வர வேண்டும் என்றெல்லாம் சவால் விடுத்து பார்த்துவிட்டார்.  அதிமுக இருக்கும் கூட்டணியையும் அன்புமணி விரும்ப மாட்டார். இந்த நிலையில்தான் அன்புமணி, டி.டி.வி.தினகரனுடன் தனியாக கூட்டணி அமைத்து களமிறங்க கமல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்களுக்கான தொகுதிகளை திமுக தான் ஒதுக்கும். இந்த நிலையில், தமது கட்சிக்கு ஓரிரு சீட்டுக்கள் கிடைப்பதே கடினம். தமது இயக்கத்திற்கு இது முதல் தேர்தல் என்பதால் அதிக தொகுதிகளில் களமிறங்கி பல்ஸ் பார்க்க வேண்டியது அவசியம். டி.டி.வி, அன்புமணி ஆகியோருடன் இணைந்து அதிமுக, திமுகவுக்கு மாற்றான ஒரு கூட்டணியை அமைத்து மாற்று சக்தியாக உருவெடுக்க இதுவே தருணம்’ என்கிற முடிவில் கமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் கமல் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு  தனது பிரதிநிதியாக தங்கதமிழ்செல்வனை, டி.டி.வி.தினகரன் அனுப்பி வைத்தார். அந்த கூட்டத்தில் பா.ம.க சார்பில் அன்புமணி கலந்து கொண்டிருந்தார். அப்போதிருந்தே, இவர்களுக்குள் ஓர் இணக்கமான நட்பு உருவாகி விட்டது.  அந்தக்கூட்டத்தில் கமலுடன் கூட்டணி சேர்வது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தோடு தினகரனின் அப்ரோச் அன்புமணியை வெகுவாக கவர்ந்து விட்டதாக பாமகவினர் கூறுகின்றனர். ஆகையால் கமல், டி.டி.வி.தினகரன், அன்புமணி கூட்டணி அமைவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. 

கமல் கட்சி  ‘மக்கள்’ நீதி மய்யம்,  அன்பு மணியின்  பாட்டாளி ’மக்கள்’ கட்சி, டி.டி.வி.தினகரனின்  அம்மா ‘மக்கள்’ முன்னேற்ற கழகம்... ஆஹா என்ன ஒற்றுமை மூவரது கட்சியிலும் ’மக்கள்’ இருக்கிறது. அப்படியானால் கூட்டணி உறுதியாகி விடுமோ..!?
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close