சிம்புவுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி பதில்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 05:19 pm

anbumani-ramadoss-replied-to-simbu-for-vijay-s-sarkar-poster

நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவரை புகை பிடிக்க வேண்டாம் என்று கூறியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட போஸ்டர் விவகாரம் தான் தற்போதைய ஹாட் டாபிக். போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்க, போஸ்டரை நீக்கும்படி, நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் போஸ்டரை நீக்கியது. 

பின்னர், சர்கார் பட போஸ்டர் தொடர்பாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கோரிய வழக்கில், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தொடர்ந்து இயக்குநர் டி.ராஜேந்தர்," நடிகர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். அது ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழன் என்பதால்தான் விஜய் படத்தை எதிர்க்கிறார்களா?" என பேசினார். 

அடுத்ததாக நடிகர் சிம்பு, "சினிமாவில் வரும் புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக அன்புமணியுடன் விவாதம் நடத்த தயார்" என சவால் விட்டுள்ளார். 

இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார். அவர், "விஜய்யின்  உடல்நலம் கருதியே நான் அவ்வாறு கூறினேன். அவர் புகைப்பிடித்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம். எனவே தான் இதுபோன்ற காட்சிகளை தவிர்க்குமாறு கூறினேன். எனக்கும் விஜய்க்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் இல்லை. தமிழன் என்றதால் விஜய்யை எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நான் தமிழன் இல்லையா?" என தெரிவித்துள்ளார்.

மேலும் சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close