இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 07:46 am

madras-hc-asked-to-director-bharathiraja

சென்னை: தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிகிறது, அவரின் முன் ஜாமீன் நிபந்தனை உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா? என இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இந்து கடவுளை விமர்சித்து பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என பாரதிராஜா  சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். கடந்த மே 23ல் இந்த மனு மீதான விசாரணையில், முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பாரதிராஜா மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், "குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை. எனவே முன்ஜாமீன் உத்தரவைப் பெற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள் பேசியதாவது, "தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இயக்குநர் பாரதிராஜா கலந்துகொள்வதாக செய்திகள் வருகின்றன. நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்ல முடிகிறது...அவரால் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்ற முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை?" என கேள்வி எழுப்பினார். 

பாரதிராஜாவுக்கு, கால அவகாசம் வழங்குவதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close