’வெற்றிபெற முடியாது...’ கமல் ஹாசனை சீண்டிய ரஜினி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Jul, 2018 03:30 pm

can-not-win-rajini-wearing-kamal-hassan

திரையுலகில் நண்பர்களாக இருந்து வந்த ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்த பின்னர் கருத்து மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்  சீண்டுவது தொடர்ந்து வருகிறது. 

புதிய நீதிக்கட்சி தலைவரும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தருமான ஏ.சி.சண்முகத்திற்கு வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவருக்கு தனியார் அமைப்பு சார்பாக சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தனது பாணியில் குட்டி கதை ஒன்றை ரஜினிகாந்த் கூறினார். 

"பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்து, சேர்த்து வைத்த பணத்தோடு புறப்பட்டார். போகும் வழியில், சில ஏழைகளை கண்டார். வைத்திருந்த பணத்தை, அவர்களுக்கே செலவு செய்தார். அதன் வழியாக, அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டதாக கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வது தான் இறை தொண்டு" என்றார்.

"உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும்" என்று கூறினார். உழைப்பு, முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியாது என அவர் கமல் ஹாசனை மனதில் வைத்து பேசியதாகக் கூறப்படுகிறது.  இவர்கள் இருவருக்குமிடையே கருத்து மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது தி.மு.க நடத்திய முரசொலி பவழ விழா. அந்த விழாவில் பார்வையாளராக மட்டுமே ரஜினி கலந்து கொண்டார்.  சிறப்பு அழைப்பாளராக மேடையில் பேசிய கமல், தற்காப்பை விட, தன்மானமே முக்கியம் என்று ரஜினியைத் தூண்டிவிட்டார். 

கமலின் முரசொலி பவள விழா பேச்சுக்கு, சென்னையில் நடந்த சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவில் பதிலடி கொடுத்தார் ரஜினிகாந்த். ’அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் சினிமா, பேர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதற்கு மேல் ஒன்று வேண்டும். அது என்னவென்று எனக்கு தெரியாது. அது கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்று ரஜினி பதிலடி கொடுத்தார்.  

அடுத்து சில தினங்களில், இதற்கு பதிலடி கொடுத்தார் கமல். ‘அரசியலில் வெற்றி என்றால், தனிக்கட்சி தொடங்கி, அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆவதா?  வெற்றிபெற வைத்த மக்களை கையேந்தவிடாமல், சுயமரியாதையுடன் வாழவைப்பது தானே வெற்றியாக இருக்க முடியும்? உண்மையான வெற்றி என்பது அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத காந்தி, பெரியாரின் வெற்றி தான் காலத்திற்கும் நிலைத்திருக்கும் வெற்றி என்று ரஜினியை குறிவைத்து பேசினார்.  

இதனிடையே போயஸ் கார்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ’கமல் எனக்கு எதிரியில்லை ஏழ்மை, லஞ்சம், வேலையின்மைதான் எனது எதிரி’’ என்றார் ரஜினிகாந்த். மற்றொரு சந்தர்ப்பத்தில் கமலிடம், நிருபர்கள், 'நடிகர் ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட, பல விஷயங்களில் கருத்து சொல்வதில்லையே' என, கேள்வி எழுப்பினர். அதற்கு கமல், 'இதுமட்டுமல்ல, பல விஷயங்களில், அவர் அப்படித் தான் இருக்கிறார்' என, கிண்டலாக பதிலளித்தார் கமல். இப்படி தொடர்ந்து வந்த சீண்டல்கள் இப்போது வரை நீள்கிறது. 

சினிமாத்துறையில் இருக்கும்  வரை நண்பர்களாக இருந்து வந்த இருவரும் அரசியலில் களமிறங்கிய பிறகு மோதிக்கொள்வது சர்ந்தர்ப்பவாதமா? சூழ்நிலையா? என இருவருக்கும் பொதுவான நண்பர்கள் குழம்பித்தவிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close