தயாரிப்பாளர் நடிகர் என சினிமாவில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் மெதுவாக முழுநேர அரசியலிலும் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.
அவர் நடித்த 'நிமிர்' படம் வெளியாகும் சமயத்தில் தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலினைப் போல் உதயநிதியும் அரசியலுக்கு வருகிறார் என்ற 'டாக்' இருந்தன. ஆனால் படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்கள், இதில் உண்மையில்லை என தி.மு.க-வினர் அதை மறுத்தனர். ஓ அப்படியா என நாம் நினைக்கும் நேரத்தில் கட்சி தொடர்பான கூட்டம் மற்றும் போராட்டங்களில் தலை காட்டத் தொடங்கினார் உதயநிதி.
இப்போது முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றி பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்க உள்ளார்.‘நான் பொறந்ததுல இருந்தே திமுக-காரன் தான்’ என மார்தட்டிக் கொள்ளும் உதயநிதி, தீவிர அரசியலில் இறங்கப் போவதற்கான முன்னெடுப்பே இந்த நிகழ்வு என தி.மு.க வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் நாளை திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உதயநிதி 7 இடங்களில் திமுக கட்சிக் கொடி ஏற்ற உள்ளார். ஆரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு அரசியல் ஆசை வராமல் இருக்குமா என்ன? இதற்கடுத்து உதயநிதியின் 'மூவ்' என்னவாக இருக்கும் என்பதே தற்போது தி.மு.க வட்டாரங்களில் ஹாட் டாக்.