கருணாநிதி சமாதிக்கு சிக்கல்... '4 சமாதிகளையும் அகற்றியே தீருவேன்' என சவால்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Aug, 2018 01:33 pm

the-problem-for-karunanidhi-samadhi

மெரினா கடற்கரையில் உள்ள நான்கு தலைவர்களின் நினைவகமும் இருக்கக்கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தி.மு.க., சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், மெரினா கடற்ரையில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, நிலம் ஒதுக்க, தமிழக அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் துரைசாமி தொடர்ந்த 3 வழக்குகளும், பாமக வார்பில் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த 1 வழக்கும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், ஊடகங்களில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் வாபஸ் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கருணாநிதியை  அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்கித் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக டிராஃபிக் ராமசாமி கூறுகையில், ‘‘மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வின் நினைவிடங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து இருந்தேன். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த எனது வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நான் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதாக ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டு விட்டன.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளேன். உச்ச நீதிமன்றமும் இதுதொடர் பாக மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது. என்னைப் பொறுத்தவரை மெரினா கடற்கரையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக யாருக்கும், எந்த நினைவகமும் இருக்கக்கூடாது. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நான்கு சமாதிகளையும் அகற்றாமல் ஓயமாட்டேன்’" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close