திரூவாரூர் தொகுதியில் மு.க.தமிழரசு? அதிரடியாக களமிறங்கும் கருணாநிதியின் அடுத்த வாரிசு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Aug, 2018 06:15 pm

karunanidhi-son-m-k-thamilarasu-contest-in-tiruvarur-constituency

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதியில் மு.க.தமிழரசுவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் வாரிசு அரசியல் பற்றி கேட்டபோது ‘’ ஹைதராபாத் நிஜாம்களுக்கு வரவேண்டிய கவலை அது. நமக்கு அந்த சிந்தனையே வரக்கூடாது’’ என்றாராம். ஆனால், அவரது காலத்திற்கு பிறகு கட்சியை வழி நடத்தி வரும் கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாரிசு அரசியல் மட்டுமே சிந்தனையாகவே இருந்து வருகிறது. வாரிசு அரசியலுக்கு கருணாநிதி ஊக்கம் தந்தார் என்றால், அவர் இறந்த சில நாட்களில் அதற்கு உரம் சேர்க்கத் தயாராகி வருகிறார்கள் அவரது குடும்பதினர். ஆம்.. அவரது குடும்பத்தில் இருந்து இன்னொரு முயல்குட்டி வெளியே வந்து அரசியல் களத்தில் துள்ளிக்குதிக்கத் தயாராகி வருகிறது.   

                                               கருணாநிதியுடன் மு.க.தமிழரசு குடும்பம்

கருணாநிதிக்குப் பதிலாக அவரது மகன் மு.க.தமிழரசை களமிறக்கத் தயாராகி விட்டனர் அவர்களது ’குடும்பக்’ கட்சியினர்! கடந்த 7ம் தேதி கருணாநிதி மறைந்தார். அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 13வது முறையாகவும், இறுதியாகவும் தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும்பெற்றார். அவர் மறைந்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக மு.க.தமிழரசு களம்காண இருக்கிறார்.  தயாளு அம்மாளின் பிள்ளைகளில் மூத்தவர் மு.க.அழகிரி. அடுத்தவர் மு.க.தமிழரசு. அதற்கடுத்தவர்தான் மு.க.ஸ்டாலின். 

இவர்களில் மு.க.ஸ்டாலின் இளம்பிராயத்திலேயே கட்சிக்கு வந்து விட்டார். இடைப்பட்ட காலத்தில் இறங்கினாலும் மு.க.அழகிரி அதிரடி அரசியல்வாதி என்ற ’நற்பெயருக்கு’ பல சான்றுகளை பெற்றிருக்கிறார்.  தந்தை காலத்திலேயே மு.க.ஸ்டாலின் வடக்கை ஆள, மு.க.அழகிரியோ தெற்கை ஆண்டு அலற வைத்துக் கொண்டிருந்தார். அரசியல் வாடையே அடிக்காமல் ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மு.க.தமிழரசுக்கு இப்போதுதான் மூக்கு வியர்க்க ஆரம்பித்து இருக்கிறது. ஆம்... அவர் டெல்டா பகுதியை ஆள அடித்தளம் போடக் கிளம்பி விட்டார். இந்த முடிவை மு.க.ஸ்டாலின், அழகிரி, செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுகட்டி பேசி உறுதியாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

 

                2016 திருவாரூர் பிரச்சாரத்தில் டிராக்டர் ஓட்டும் மு.க.தமிழரசு 

மு.க.தமிழரசுக்கு திருவாரூரில் என்ன தெரியும்...? எல்லாம் தெரியும். அதற்குக் காரணம் கருணாநிதி! 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போதே உடலளவில் கஷ்டப்பட்டார் கருணாநிதி. அவர் சென்னையில் ஓய்வெடுக்க, மு.க.தமிழரசுதான் தனது தந்தைக்காக கிராமம் தோறும் சென்ற்று வீடுவீடாக பிரச்சாரம் செய்தார். மக்களோடு மக்களாக இருந்து டிராக்டர் ஓட்டினார்... மாட்டு வண்டி ஓட்டினார் எல்லாம் ஓட்டினார். கருணாநிதி வெற்றியும் பெற்றார். அதன்பிறகு தற்போது வரை அந்தத் தொகுதிக்கு கருணாநிதிக்குப் பதிலாக அடிக்கடி சென்று தொகுதியையும் மு.க.தமிழரசுவே கவனித்து வந்தார்.

இதனால், இடைத்தேர்தலில் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியை பறிகொடுத்து விடக்கூடாது என்பதாலும், கருணாநிதி மீது கொண்ட மரியாதை மட்டும் அனுதாப ஓட்டுக்களை பெறவேண்டுமானால் அவரது வாரிசு ஒருவர் களமிறங்க வேண்டும் என்பதால், தொகுதிக்கு பரிட்சயமான முக்கியமாக கருணாநிதியின் வாரிசான மு.க.தமிழரசு களமிறங்க இருக்கிறார்.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.