தலைவருடன் எனது தந்தையையும் இழந்துள்ளேன்: ஸ்டாலின் உருக்கமான பேச்சு!

  முத்துமாரி   | Last Modified : 14 Aug, 2018 01:26 pm
stalin-speech-at-dmk-party-meeting

நீங்கள் தலைவரை தான் இழந்துள்ளீர்கள்; நான் தலைவருடன் எனது தந்தையையும் இழந்துள்ளேன் என செயல் தலைவர்  ஸ்டாலின் உருக்கமாக  பேசினார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலாவதாக கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தி.மு.கவின் பல்வேறு நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.  

இறுதியாக  ஸ்டாலின் தழுதழுத்த குரலில் தான் தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், "தி.மு.க தலைவர் இல்லாமல் ஒரு கூட்டம் நடைபெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  நீங்கள் தலைவரை தான் இழந்துள்ளீர்கள்; நான் தலைவருடன், எனது தந்தையையும் இழந்துள்ளேன். இந்தஇழப்பை  யாராலும் ஈடு கொடுக்க முடியாது. தலைவர் இருக்கும்போதே நாம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என கழகத்தோழர்களிடம் கூறி அதற்கான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தோம். அவர் இருக்கும்போதே வெற்றியை அவரது காலடியில் கொண்டுபோய் வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் எவ்வளவு போராடியும் தற்போது கலைஞரை இழந்துவிட்டோம். 

அவரது உடலை மெரினாவில் புதைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதிய போது, அதனை அவர்கள் மறுத்துவிட்டதாக தொலைக்காட்சி செய்தி மூலம் தெரிந்துகொண்டேன். பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், "நீங்கள் கட்சியின் செயல் தலைவர். எனவே நீங்கள் வரவேண்டாம். நாங்கள் சென்று முதல்வரிடம் பேசி அனுமதி பெறுகிறோம்" என்று என்னிடம் கூறினர். ஆனால் தலைவரின் ஆசையை நிறைவேற்ற எனது தன்மானத்தையும் இழக்கத்தயார் என்று கூறி அவர்களுடன் நான் சென்றேன்.

'கலைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அனுமதி கொடுங்கள்' என்று முதல்வரின் கைகளை பிடித்து மன்றாடினேன். அப்போதும் கூட அவர்கள் இறங்கி வரவே இல்லை. இறுதியில் 'பார்க்கலாம்' என்று கூறினார்கள். அந்த நம்பிக்கையில் நாங்கள் திரும்பினோம். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில், மெரினாவில் தீர்ப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவ்வளவு துக்கத்திலும் ஒரு சிறிய மகிழ்ச்சி.நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக கலைஞர் இறந்தும் வென்று விட்டார். இதற்காக  பாடுபட்ட வழக்கறிஞர் குழுவுக்கு மிக்க நன்றி. 

ஒருவேளை தீர்ப்பு  நமக்கு சாதகமாக வராவிட்டால், கலைஞரின் உடல் அருகில் தான் என்னுடைய உடலை புதைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தலைவர் கலைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி தான். தலைவரின் கொள்கைகளை கடைப்பிடித்து திராவிட கழகத்தின் வெற்றியை நிலைநாட்டுவோம்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close