ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Aug, 2018 03:10 am
when-stalin-stood-by-azhagiri-s-side

பொரி உருண்டை என நினைத்திருந்தால் அணுகுண்டாக வந்து நிற்கிறார் மு.க.அழகிரி.  2014ஆம் ஆண்டு கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, தனது தந்தை கருணாநிதியின் மறைவுக்குப்பிறகு அவரது நினைவிடத்தில் தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அழகிரியை இணைத்துக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், தி.மு.கவின் செயல்பாடுகள் குறித்தும், தொண்டர்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அழகிரி. இதனால், தி.மு.க பிளவுபட்டு விடுமோ என பதபதப்பில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க தொண்டர்களும் தவித்து வருகின்றனர். ஆனால், தி.மு.கவுக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் மு.க. அழகிரியால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் புதிதல்ல. இதற்கு முன்  பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.  

1996ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்குவந்தபோது, மதுரையின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக மு.க. அழகிரி உருவெடுக்க ஆரம்பித்தார். அப்போது, தென் மாவட்டங்களில் முக்கியத் தலைவர்களாக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தா.கிருட்டிணன் உள்ளிட்டவர்கள் மு.க. அழகிரியின் செயல்பாட்டை ஏற்கவில்லை.

 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனும், வி.கருப்பசாமி பாண்டியனும் தி.மு.கவில் இணைந்தனர். இது கட்சிக்கு தென் மாவட்டங்களில் புதிய வலுவைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களது வருகையையும் மு.க.அழகிரி விரும்பவில்லை. இதையடுத்து, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் அழகிரி. அப்போதுகூட அவர் கட்சியில் இல்லை.

மு.க.அழகிரியின் விமர்சனத்திற்குரிய செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, "மு.க.அழகிரி கட்சியிலா இருக்கிறார்? அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?" எனக் கேள்வியெழுப்பி தந்தையின் பற்றை வெளிப்படுத்தினார். அந்தத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். அழகிரிக்கு ஆதரவான நிர்வாகிகள் தி.மு.கவுக்கு எதிராகப் பணியாற்றியதே தோல்விக்குக் காரணம் என கூறப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கட்சி நிர்வாகிகள் யாரும் மு.க.அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் பேருந்துகளைக் கொளுத்த, மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் வேலுசாமியின் பதவி பறிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அழகிரி சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டித் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக மு.க.அழகிரி ஆற்றிய கடுமையான பணிகள் அவரை மீண்டும் கட்சிக்கு நெருக்கமாக்கின. 
 2003ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்ட தா.கிருட்டிணன் மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த கொலைவழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அழகிரி, மதுரையின் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அழகிரி கைதுசெய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் அதனைக் கண்டித்தார். இதன் மூலம் சகோதரப்பாசத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். 

2007ஆண்டு மே மாதம், முதலமைச்சர்  கருணாநிதியின் சட்டமன்றப் பொன் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த தருணம். அப்போது தினகரன் நாளிதழில் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. அந்தக் கருத்துக் கணிப்பில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலினுக்கு 70 சதவீத ஆதரவு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு 20 சதவீத ஆதரவு இருப்பதாகவும் மு.க.அழகிரிக்கு இரண்டு சதவீத ஆதரவு இருப்பதாகவும் முடிவுகள் வெளியிடப்பட்டன.

 இந்தக் கருத்துக் கணிப்பு மு.க. அழகிரிக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் முதலில் தினகரன் நாளிதழைக் கொளுத்தினர். அதற்குப் பிறகு மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள தினகரன் அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இதில் சிக்கி தினகரனில் பணியாற்றிய 3 ஊழியர்கள் உயிரிழந்தார்கள். கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஏற்பாடுகளில் இருந்த தி.மு.கவுக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சையின் துவக்கப் புள்ளி தயாநிதி மாறன்தான் என்றாலும், மூன்று உயிர்கள் பலியாகும் அளவுக்கு தாக்குதல் நடத்தியதால் அழகிரியும் தி.மு.கவும் கடும் விமர்சனத்திற்குள்ளானார்கள். ஆனாலும், அழகிரி மீதான பாசத்தை அப்போதெல்லாம் கருணாநிதி குறைத்துக் கொண்டதேயில்லை கருனாநிதி. அழகிரியின் செயலை அவரிடம் சுட்டிக்காட்டினால், “நான் அதிகம் பக்குவமில்லாமல் வேகமான செயல்பாடு உடையவனாக இருந்த போது பிறந்தவர் அழகிரி. நான் வாழ்க்கையில் கொஞ்சம் பக்குவப்பட பின் பிறந்தவர் ஸ்டாலின்” என தனது மகன்கள் இருவர் குறித்து கருணாநிதி கூறிய வார்த்தைகள் இவை. 

‘’மு.க.அழகிரியால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மு.க.அழகிரியை கருணாநிதியும் கண்டிக்காமல் விட்டதால்தான் தற்போது தி.மு.கவும் அவர்களது குடும்பமும் தர்மசங்கடத்தை அனுபவிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என சும்மாவா சொன்னார்கள்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close